ராதிகாவை எதிர்த்து போட்டி மனுதாக்கல் செய்த பாஜக பிரமுகர்! விருதுநகரில் குழப்பம்!

ராதிகாவை எதிர்த்து போட்டி மனுதாக்கல் செய்த பாஜக பிரமுகர்! விருதுநகரில் குழப்பம்!

ம.பா.கெஜராஜ்,

 விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக வின் அதிகாரபூர்வமான வேட்பாளராக நடிகை ராதிகா வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் 'டெல்லி பாஜக மோடி அணி' என்ற பெயரில் பாஜக நிர்வாகி வேதா தாமோதரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இவர், மதுரை மாவட்டம் திருமங்லம் அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நீதித்துறை பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் வேதா தாமோதரன் ஆகியோர் முயற்சி செய்தனர்.

 இதில் ஒருபடி மேலே போய்  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வேண்டும் என வேதா தாமோதரன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்து வைத்தார்.

 மக்கள் செல்வாக்கும் சமுதாய பின்புலமும் தனக்கு உள்ளதாகவும், அதனால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் தனக்கு சீட் வழங்க வேண்டும் என்றும், அப்படி எனக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றால் திருமங்கலம் டோல்கேட்டில் மறியலில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் வேதா தாமோதரன் மிரட்டியிருந்தார்.

 ஆனால் சரத்குமார் நடத்திவந்த சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டதால், சரத்தின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக சீட்டு கொடுத்தது. ஆகவே ராதிகா, கடந்த 25-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படியிருக்க, தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால், 'டெல்லி பாஜக மோடி அணி' என்ற பெயரில் வேதா தமோதரன் சுயேட்சை வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆகவே, பாஜக சார்பில் அதிகார்ப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதிகாவை எதிர்த்து, பாஜக விவசாய அணியைச் சேர்ந்தவர் போட்டியிடுவது பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.