பேய் பிசாசு ஆவி பீதி....பிரேத பரிசோதனை உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமம்; பேச்சுவார்த்தையால் சாதித்த காவல்துறை !விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கலெக்டர் தகவல்!

பேய் பிசாசு ஆவி பீதி....பிரேத பரிசோதனை உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராமம்; பேச்சுவார்த்தையால் சாதித்த காவல்துறை !விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கலெக்டர் தகவல்!

ம.பா.கெஜராஜ்,

  சுதந்திரம் பெற்ற காலம் முதல் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை ஊருக்குள் கொண்டு வந்து வைப்பதற்கும், வீட்டின் அருகே இறுதிச் சடங்குகள் செய்வதற்கும் அனுமதிக்காத நடைமுறை இருந்து வந்தது.

 பேய், பிசாசு, ஆவி பீதியினால்  பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த மூடநம்பிக்கையை உடைக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சக்கரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 14.04.2026 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

   இச்சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  அப்போது, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என்றும், ஊருக்கு வெளியே வைத்து மட்டுமே இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,

  ஆகவே கிராமத்துக்கு வெளியே நடுக்காட்டான் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது, இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை எனவும் தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி தர்ஷினியின் தந்தை ரஜினி என்பவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

  சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

   வேலூர் மாவட்டத்தில் இருந்து ஏடிஎஸ்பி பழனி, திருப்பத்தூர் நகர டிஎஸ்பி முரளி, ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கிராமத்தில் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர்.

   இதற்கிடையில், ரஜினியின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, மீண்டும் அதே எதிர்ப்பு எழுந்தது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை ஊருக்குள் கொண்டு வர அனுமதிக்க முடியாது என்றும், சுடுகாட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் வைத்து சடங்குகளை நடத்தலாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறையினர் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தற்போதைய சமூக சூழல், அறிவியல் முன்னேற்றம், மனிதநேயம் மற்றும் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கிராம நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

  பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.

   இதையடுத்து பலத்த காவல் பாதுகாப்புடன் சக்கரக்குப்பம் கிராமத்தில் வரலாற்றில் முதன்முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

   இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர், பல தலைமுறைகளாக இருந்து வந்த மூடநம்பிக்கையை அமைதியான முறையில் உடைத்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டிய திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அக்ஷய் அணில் வாக்கரே ஐ.பி.எஸ்., ஏடிஎஸ்பி பழனி, டிஎஸ்பி முரளி மற்றும் காவல் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  மேலும், ரஜினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே தர்ஷினி மரண வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நபர்களின் ஜாமீனை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியல் சிந்தனையையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில்  வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.ராஜசேகர் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். இது போன்ற தகவல்  இப்போதுதான் என் பார்வைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கிராமம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சொன்னார்.