ஈரானுக்கு கொடுக்கிற அடியை பார்த்து மற்ற நாடுகள் அலற வேண்டும்! இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு!

ஈரானுக்கு கொடுக்கிற அடியை பார்த்து மற்ற நாடுகள் அலற வேண்டும்! இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு!

மபா.கெஜராஜ்,

 ஈரானுக்கு கொடுக்கிற அடியை பார்த்து மற்ற நாடுகள் அலற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் கலந்துக் கொண்ட அவசரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  இஸ்ரேலை  ஈரான் நாட்டு ஏவுகணைகள் தாக்கியுள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்த அந்நாட்டு அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பதில் தாக்குதல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது பற்றி எரிவதற்கு முதல் காரணம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் தான்.     இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். குறிப்பாக, இதில் ஈரானின் முக்கிய தளபதியான முகமது ரெசா ஜாஹேதி சாகடிக்கப்பட்டார்.இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது.

  இம்முற்றை ஈரான் ஆத்திரத்தின் உச்சிக்கே போனது.

இந்நிலையில்  இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைக்கோர்க்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 சும்மா இருக்குமா இஸ்ரேல் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

 இதை சர்வதேச உளவு அமைப்புகள் உறுதிபடுத்தியிருக்கின்றன.  மேலும், ஈரான் மீது எப்போது தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்து இஸ்ரேல் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. நடத்தப்படவுள்ள இந்த தாக்குதலானது ஈரானுக்கு மட்டுமல்லாமல் தங்களை எதிர்க்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் அளித்துள்ள பேட்டியில், ''ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. இதை உடனடியாக ஈரான் நிறுத்த வேண்டும். ஈரானுடன் நேரடி மோதலை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயங்காது'' என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க உதவினால், அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இஸ்ரேல் மீது ஈரான்நடத்தியுள்ள தாக்குதல் குறித்துஜி7 தலைவர்களுடன் விவாதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், ''ஈரான் வீசிய குண்டுகளை நாங்கள் இடைமறித்து அழித்தோம், இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்றார். ஈரானுக்கு சரியான பதிலடிகொடுக்கப்படும் இஸ்ரேல் கூறியுள்ளது.

 ஈரான் தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜப்பான், செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ''இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அமைதி காத்து, உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அவசர உதவி தேவைப்பட்டால், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை 972 - 5475207112, 972 - 543278392 ஆகிய எண்களிலும், நீஷீஸீ௳ cons 1.telaviv@mea.gov.in  என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்'' என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.