தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி மறைந்தார்! சீட் கிடைக்காததால் சோக முடிவு!
டி.இ.முகமது,
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 76. மதிமுக சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்த கணேசமூர்த்தி இந்த முறையும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், ஈரோடு தொகுதியை திமுக தன்வசம் வைத்துக்கொண்டு, தங்கள் கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சியை ஒதுக்கியது.
அதுமட்டுமின்றி திருச்சியில், வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் மனவெறுப்படைந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். சிகிச்சையில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு இவர் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்பியாக தோந்தெடுக்கப்பட்டவர். ஏற்கனவே துரை வைகோ கட்சிக்கு பொறுப்பு வகிக்க அறிவிக்கப்பட்ட போது இவர் கடுமையாக எதிர்த்தார்.
இவரிடமிருந்து மதிமுக கட்சியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் எப்படியாவது சீட் வாங்கி ஜெயித்துவிட வேண்டும் என்று கணேசமூர்த்தி விரும்பினார். ஆனால், மதிமுக அவருக்கு சீட்டு கொடுக்க விரும்பாமல், ஈரோடு தொகுதியை தவிர்த்துவிட்டு திருச்சியை கேட்டு பெற்றுக் கொண்டது.
இதனால் கணேசமூர்த்தி ஏமாற்றம் அடைந்தார்.
பின்னர் கடந்த 24ம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது தீவிர மன உளைச்சல் காரணமாக சல்பாஸை தண்ணீருடன் கலக்கி குடித்திருக்கிறார். இதனால் சுயநினைவின்றி சரிந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட்டு ஒதுக்கப்படாததால் விபரீத முடிவு எடுத்தார் என்று கூறப்படுகிறது.

admin
