அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்!

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்!

 உ.சசிகுமார்,

 அதிமுக வின் காரசார பேச்சாளரும், முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் வசித்து வரும் இவருக்கு நேற்று முன்தினம் இரவு செல்போனில், அறிமுகமில்லாத எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தரக்குறைவாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 பாமகவுடன் கூட்டணி பற்றி பேசிவந்த அதிமுக, இவரைத்தான் பலமுறை தூதுவராக அனுப்பிவைத்தது என்று கூறப்பட்டு வந்தது.

 ஆனால் அவர்கள் பாஜக வுடன் கூட்டணி வைத்து தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவி சண்முகம் எதிர்கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக அன்புமணி ராமதாசை மையப்படுத்தி பல ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று பேசினார்.

 அதே போல் அவர் பாஜகவையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

 இதையடுத்து சி.வி.சண்முகம் உதவியாளர் ராஜாராம், ரோஷனை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி மற்றும் போலீசார், செல்போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.