காட்டன்... லாட்டரி பிசினஸ் நடத்தும் ஊதுவத்தி முதலாளி! கைது செய்யுமா போலீஸ்!
ஜி.சாந்தகுமார்,
காட்டன் மற்றும் லாட்டரி பிசினஸ் நடத்தும் பலரை போலீசார் கைது செய்துவரும் நிலையில், வேலூர் மாவட்டம் குட்டி சிவகாசியை தலைமையிடமாக வைத்துக் கொண்டுள்ள ஒரு நபர், இந்த தொழில் மூலம் ஏழைகளை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
வடக்கு மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த காட்டன் மற்றும் ஒரு நெம்பர் லாட்டரி போன்ற சூதாட்டங்களுக்கு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தடை விதித்து கடுமை காட்டி வருகிறார்.
இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் குட்டி சிவகாசி பகுதியை தலைமையிடமாக கொண்டுள்ள ஒரு ஆசாமி ஊதுவத்தி தொழில் செய்துவருவதாக கூறிக்கொண்டு காட்டன் மற்றும் லாட்டரி பிசினஸை செய்து வருகிறார்.
அந்த பழைய பெருச்சாலி காவேரி பட்டினம் முதல் காஞ்சிபுரம் வரை இந்த சூதாட்ட பிசினஸை விரிவுபடுத்தி கல்லாகட்டி வருகிறது.
இவருக்கு உள்ளூர் காவல் அதிகாரிகள் சிலர் பக்கபலமாக உள்ளார்கள்.
இந்த சூதாட்டம், நடுத்தர மற்றும் கூலி தொழிலாளிகளை மையப்படுத்தி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆளுங்கட்சி பிரமுகரான இவரை ஏற்கனவே வடக்கு மண்டல ஐஜியாக இருந்த திரு.கண்ணப்பன் ஐபிஎஸ் அவர்கள் தூக்கி உள்ளே வைத்தார்.
அப்போதே அந்த பெருச்சாலி சார்ந்திருந்த அரசியல் கட்சி அவரை எச்சரித்தது. அப்படியிருக்க தற்போதுஅவர் ஆளுங்கட்சியில் இருந்துக் கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடித்து வருகிறார்.
இத்தனைக்கும் இதே பகுதியில் இவ்வகையான சூதாட்டம் நடத்தி வந்த நால்வரை காவல் துறையினர் அமுக்கிய நிலையில், இந்த பெருச்சாலியை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள்.
உத்தமரைப் போல காட்டிக் கொண்டு கார் ஏறி ஊர் ஊராக சென்று இந்த தொழிலை அவர் செய்து வருகிறாராம்.
இவர் குறித்தும், அவருக்கு துணை போகும் ஒரு சில காவல் அதிகாரிகள் குறித்தும் ஐஜி அவர்களுக்கு புகார் தட்டிவிட ஒரு குரூப் புறப்பட்டுவிட்டதாம்.
இது ஒருபுறம் இருக்க வேலூர் மாவட்டத்தின் அருகே உள்ள பட்டு நகரத்தில் தங்கராஜ், கிருஷ்ணன், சங்கர் மற்றும் முன்னாள் எஸ்.ஐ. தரப்பினர் தற்போது இந்த சூதாட்ட பிசினஸை விட்டு விலகியிருந்தாலும் கூட சில காவல் அதிகாரிகள் நீங்க நடத்துங்க பார்த்துக் கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்துகிறார்களாம்.
ஏற்கனவே தங்கராஜ் என்பவரின் சொகுசு கார் பறிக்கப்பட்டிருப்பதால் பலரும் இந்த தொழிலை செய்ய முன்வரவில்லையாம்.
அதே போல் வந்தவாசியில் ஒரு பெருச்சாலி இந்த சூதாட்டத்தை நடத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வைத்திருந்தார். அவரை போலீசார் பிடித்து குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டனர்.
அப்படியிருந்தும் அங்கு இலை மறைவு காய்மறைவாக பிசினஸ் நடந்துக் கொண்டுதான் இருக்கிறதாம்.

admin
