''வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! மருத்துவர் ராமதாசு கண்ணீர் பேட்டி! துண்டாக்கப்படும் மாங்கனி!

''வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது! மருத்துவர் ராமதாசு கண்ணீர் பேட்டி! துண்டாக்கப்படும் மாங்கனி!

ம.பா.கெஜராஜ்,

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை சந்திப்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது, பெற்றதாய் என்றும் பாராமல் பாட்டிலால் தாக்கினார், மூச்சு விடாமல் பொய் பேசுபவர், தலைமை பண்பு இல்லாதவர், பாஜக கூட்டணிக்காக மனைவியுடன் என் காலில் விழுந்தார்'' என்று அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

  பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே கடந்த சிலகாலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது.

  புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் சங்க தலைவராக, தனது மகள்வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். கூட்ட மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

 தொடர்ந்து, சமீபத்தில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் நேற்று சந்தித்தார்.

  அவர் கூறியதாவது: 'நான் என்ன தவறு செய்தேன்' என தருமபுரியில் அன்புமணி பேசியுள்ளார். இது முழுக்க முழுக்கமக்களையும், கட்சி தொண்டர்களையும் திசை திருப்பும் செயல். அவர் தனது தவறுகளை மறைத்து, மக்களின் அனுதாபத்தை பெறமுயற்சிக்கிறார். பார்க்கப்போனால், வன்னியர்களுக்கு செய்து தந்த சத்தியத்தையும் மீறி,35 வயதில் அன்புமணியை மத்தியஅமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன்.

 கட்சியில் அவருக்கும், வீட்டில் எனக்கும் உதவியாக இருப்பார் என்றுதான் முகுந்தனை நியமித்தேன். அப்போது, அன்புமணி, என் தலையில் வீசாத குறையாக, மைக்கை மேஜையில் வீசினார். 'இனி என்னை சந்திக்க பனையூர் அலுவலகம் வாருங்கள்' என நிர்வாகிகளுக்கு தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

   நான்கு சுவருக்குள் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டுவந்தார். ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் போட்டு உடைத்தார். அன்புமணிக்கு பக்குவம் இல்லை என அப்போதே பலரும் வருந்தினர். 45 ஆண்டுகளாக கட்டுப்பாடுடன் நான் நடத்தி வந்த கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்ததால் நிலை குலைந்து போய்விட்டேன்.

  கட்சி வளர்ச்சிக்கு எதிராக பலதவறுகளை அன்புமணி செய்துள்ளார். பாமக இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரனை நான் நியமித்த அடுத்த விநாடியே, ராஜினாமா செய்ய சொன்னார் அன்புமணி. முகுந்தன் நியமனத்திலும் இப்படிதான் நடந்து கொண்டார்.

  பொங்கல் பண்டிகைக்கு தைலாபுரம் வந்த அன்புமணியிடம் தாய் சரஸ்வதி அம்மா, உன்னுடைய மகளுக்கு பதவி கொடுத்திருந்தால் அமைதியாக இருந்திருப்பியா, உனது 2வது மகளை போட்டிருந்தால் சம்மதம் தெரிவித்து இருப்பாயா? என்றார். உடனே அங்கிருந்த பாட்டிலை தூக்கி அம்மா மீது வீசி அடித்தார்.

   கட்சி பிரச்சினை பற்றி பேசியதும், தாய் மீதே பாட்டிலை வீசினார். நல்லவேளை, சுவர்மீது பாட்டில் விழுந்தது. அவரிடம் கொஞ்சம்கூட தலைமை பண்பு இல்லை. தருமபுரி, சேலம் சென்ற எனக்கே, நிர்வாகிகளிடம் பேசுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தார்.

  யாருடைய உழைப்பால் இந்த கட்சி உருவானது. சோறு, தண்ணீர் இல்லாமல் பேருந்தில் நின்று கொண்டு 95 ஆயிரம் கிராமங்களுக்கு சென்ற கால்கள் யாருடையது. யாருக்கு யார் கட்டுப்பாடு விதிப்பது. காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  6 ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டேன். அப்போது அன்புமணி, 'இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். விமானத்தில் 2 சொட்டு கண்ணீர் சிந்திவிட்டு, தைலாபுரம் திரும்பினேன்.

  பசுமை தாயகம் உட்பட 34 அமைப்புகளை உருவாக்கிய எனக்கு, 14 பஞ்சாயத்து கூட்டம் வைத்தனர். இதில், கட்சியை நான் பார்த்துக் கொள்வது; மக்களை அன்புமணி பார்த்துக் கொள்வார் என முடிவானது. இதையும் அவர் ஏற்கவில்லை.

  வாய் கூசாமல் பொய் பேசுவார். 'என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக 108 மாவட்ட நிர்வாகிகளை அழைத்துள்ளார் ராமதாஸ்' என அனைவரையும் தொடர்பு கொண்டு பேசி, பலரையும் வரவிடாமல் தடுத்தார் இதனால், 8 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். 'தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார், உங்களை அடிப்பார்கள்' என சமூக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

   சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் மாமல்லபுரத்தில் ஓய்வுக்காக தங்கியிருந்தபோது, என்னை சந்திக்க வந்த மருமகள் சவுமியா, 'நாள், நேரம், இடம் பார்த்துவிட்டோம். ஜி.கே.மணியை நீக்கிவிட்டு, அன்புமணியை தலைவராக்க வேண்டும் மாமா' என்றார்.

   இதுபற்றி ஜி.கே.மணியிடம் பேசினேன். ஜோதிட நம்பிக்கை அடிப்படையில், ஒன்றரை மாதத்துக்கு பிறகு ஜி.கே.மணி ராஜினாமா செய்ய, அன்புமணியை தலைவர் பதவியில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்துவைத்து, கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தேன்.

 2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், 'பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்' என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர்.

  மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும்.

 சின்னமும் கிடைத்திருக்கும். தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டுமானால், பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என்று அன்புமணி கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். தேவைப்பட்டால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, அன்புமணியை நீக்கவும் என்னால் முடியும் என்று சொன்னார்.