மாம்பழம் முடக்கமா?! பா.ம.க. மீண்டு வருமா?

சுடரொளி,
"தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மை சமுதாயங்களில் வன்னியர் சமுதாயமும் ஒன்றாகும். இந்த சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல ஒரு தலைவர் வரமாட்டாரா என்ற ஏக்கத்தில் இருந்தபோது டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். அவர் செய்த சத்தியங்கள், நடத்திய போராட்டங்கள் காரணமாக வன்னிய மக்களிடையே ஒரு நம்பிக்கை ஏற்பட்டு ராமதாசின் பின்னால் பெரும்பான்மையான வன்னியர்கள் சென்றனர்.
தங்கள் குடும்பம், தொழில் அனைத்தையும் தியாகம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு பலர் சிறை சென்றனர். சாலை மறியல் போராட்டத்தில் பலர் உயிர் நீத்தனர். இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பு அரசியல் களத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பாமக என்ற கட்சியும் டாக்டர் ராமதாசை நிறுவனராக கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இதில் பண்ருட்டியார் உட்பட பலர் எம்.எல்.ஏக்களாக ஆனார்கள். பலர் எம்.பிக்களாக ஆனார்கள். தலித் எழில்மலை, பொன்னுசாமி, ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம்,ஆர். வேலு, டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் மத்தியில் அமைச்சரானார்கள்.
சுகாதாரத்துறை, பெட்ரோலியத்துறை, ரயில்வே துறை, நிலக்கரித்துறை, மரபுசாரா எரிசக்தி துறை என்று பல்வேறு துறைகளின் பொறுப்புகள் பாமக அமைச்சர்களுக்கு மத்திய அரசில் வழங்கப்பட்டது.
இந்த பொறுப்பு வகித்த அமைச்சர்கள் வன்னியர் சங்கத்திற்காக தியாகங்கள் செய்தவர்களுக்கும், ஊர் ஊராக, வன்னியர் சங்கத்தை வளர்த்தவர்களுக்கும் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. இதனால் ஆரம்ப காலத்தில் வன்னியர் சங்கத்தையும் பாமக கட்சியையும் வளர்க்க பாடுபட்டவர்கள் உற்சாகமிழந்து போனார்கள்.
வன்னியர் சங்கத்திற்காக உழைத்த பலர் இறந்துவிட்டனர். இதற்காக உழைத்து, ஓடாய் தேய்ந்து போன ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களும் பொருளாதார சூழ்நிலையில் வறுமையில் வாடுகின்றனர். இருந்த போதிலும் இவரை நம்பி வந்து விட்டோம் வேறு எங்கு செல்வது இருக்கின்ற காலத்தை இதிலேயே கழித்து விடலாம் என்ற மனநிலையில் இன்னும் சிலர் இருந்து கொண்டிருக்கின்றனர்.
பாமகவில் இன்றைக்கு நிர்வாகிகளாக இருக்கின்ற பல பேர் சாலை மறியலுக்கு பின் வந்தவர்கள். சாலை மறியலில் பங்கு பெறாதவர்கள். அவர்கள் வன்னியர் சங்கத்தில் உழைத்த ஆரம்ப கால நிர்வாகிகளை மதிப்பதில்லை. மேலும் தலைமையே பழைய நிர்வாகிகளை மதிக்காததினால், இப்போது இருக்கின்ற பொறுப்பாளர்களும் அவர்களை மதித்து முக்கியத்துவம் தருவதில்லை.
இதனால் பாமக முன்பிருந்த வேகத்தில் செயல்பட முடியவில்லை. இந்நிலையில் டாக்டர் ராமதாசுக்கு வயதாகி விட்டது. அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. அன்புமணியோ சாலை மறியலுக்கு பின் வந்தவர்.
அவருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வன்னியர் சங்கத்திற்காக உழைத்த நிர்வாகிகளை தெரியாது. எனவே அவர்,தனது சொல் கேட்பவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்.
உழைத்து, ஓடாய் தேய்ந்தவர்களுக்கு மரியாதை இல்லாத காரணத்தினால், பழைய நிர்வாகிகள் யாரும் பெரிய அளவில் கூட்டங்களுக்கு வருவதில்லை. இப்போது இருக்கின்ற நிர்வாகிகளும், புதிது புதிதாக அவ்வப்போது நியமிக்கப்படுகின்றனர்.
இதனால் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையில் அதிக நெருக்கம் இல்லை. இதனால் உணர்வுபூர்வமாக பெரும்பாலானோர் செயல்படுவதில்லை. தலைமையிடம் பெயரெடுக்கவும், தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், தலைமை சொல்கின்ற வேலைகளை, கடமைக்கு செய்கின்றரே தவிர, ஒரு சிலரை தவிர பெரும்பாலான நிர்வாகிகள் மனதார செயல்படுவதில்லை.
இதை மனதில் வைத்து தான் டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகள் உண்மையாக உழைப்பதில்லை. ஏமாற்றுகின்றனர், என்று மகாபலிபுரம் மாநாட்டில் பேசினார்.
இட ஒதுக்கீடு என்ற ஒரு விஷயத்தை மட்டும் வன்னியர் சங்கமும் பாமகவும் கையில் எடுத்து பிரதான கோரிக்கையாக போராடி வருகின்றது.
இது எளிதில் நடைபெறக்கூடிய விஷயம் கிடையாது.
எனவே வன்னியர் சமுதாய மக்களை மேலும் பொருளாதாரத்தில் முன்னேற்றும் வகையில் செய்ய எவரும் தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால் வன்னியர் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது தவிர மற்ற சமூகங்களும் பாமகவிற்கு ஆதரவு தர வேண்டும். அப்படி தந்தால் தான் பாமக ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும்.
கட்சி முன்பு போல் வாக்கு வங்கியை வைத்திருக்கவில்லை. பாமகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது.
இதை உணர்ந்து வாக்கு வங்கியை உயர்த்த கட்சியை பலப்படுத்த ராமதாசும் அவர் மகன் அன்புமணியும் ஒத்த கருத்துக்கு வரவேண்டும்.
அதை விடுத்து பாமகவில் அப்பா- மகனுக்கு இடையே அதிகார போட்டி நிலவுவது ஆரோக்கியமான செயல் இல்லை. கட்சி வளர்ப்பதில் டாக்டருக்கு அடுத்தபடியாக அதிகம் உழைத்தவர் பேராசிரியர் தீரன். டாக்டர் செல்ல முடியாத இடங்களுக்கு தீரன் தனியாக சென்று உரையாற்றுவார். தீரனின் பேச்சைக் கேட்பதற்கே ஒரு பெரிய கூட்டம் கூடும். அத்தகைய தீரனை மகாபலிபுரம் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்படவில்லை.
இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்க இளைஞரணி தலைவரோ அல்லது பாமக இளைஞர் அணி தலைவரோ முன்னிலைப் படுத்தி பேச வைக்கப்படவில்லை. வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி கூட பேருக்கு அழைத்து, பேசவைக்கப்பட்டார்.
இப்படி கட்சியின் நிலைமை இருக்கிறது.
கட்சியை பலப்படுத்த வேண்டுமானால் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தனக்கோ தன் வாரிசுக்கோ பதவி வேண்டாம் என்று சொல்லிய ராமதாஸ் இன்று பதவி போட்டிக்கு
தன் மகனுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விட்டார். தன்மகனை, தான் உருவாக்கிய கட்சியில் தலைவர் ஆக்கினார். "வளர்த்த கடா மார்பில் பாய்வது போல்" டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு அவரது மகனே வராதீர் என்று அன்புமணி சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற கட்சியில் எல்லாம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில் பாமக மட்டும் தந்தை-மகன் மோதலில் சிக்கியிருப்பது அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு பெரிய கவலையை உண்டு பண்ணி உள்ளது.
இந்த கூத்தெல்லாம் ஒருபக்கம் இருக்க பாமக தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கபடாமல் உள்ளது. ஆக மாம்பழத்துக்கும் சுணக்கம் தான்.