ஆந்திராவில் ஜெகன் மோகன் போல சந்திரபாபு மீதும் கல்வீச்சு! வன்முறை அபாயம் என உளவுத்துறை எச்சரிக்கை!

ஆந்திராவில் ஜெகன் மோகன் போல சந்திரபாபு மீதும் கல்வீச்சு! வன்முறை அபாயம் என உளவுத்துறை எச்சரிக்கை!

வி.டி.வித்யாசாகர்,

ஆந்திர மாநிலத்தில் சட்டபேரவைக்கும் மக்களவைக்கும் சேர்த்தே தேர்தல் நடைபெறுகிறது.  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள்  மீது மர்ம நபர்கள் கல் வீசி களத்தில் டென்ஷன் ஏற்றியிருக்கிறார்கள்.

ஆந்திராவில் மே மாதம் 13-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. அதற்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் ஜனசேனாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

 ஆகவே  ஆந்திராவில்  பிரச்சாரம்சூறாவளி வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம்  விஜயவாடாவில் பரப்புரைக்காக சென்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கற்களை சுற்றி பூக்களை கட்டி வீசப்பட்டதில், ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது. இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் பரப்புரையை தொடர்ந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

இந்த டென்ஷன் அடங்குவதற்குள்ளாக, கஜுவாலா பகுதியில் இன்றைக்கு பிரச்சாரம் செய்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது பெரிய கல் வீசப்பட்டது. இருந்தபோதிலும், அந்தக் கல் சந்திரபாபு நாயுடுவின் தலையை ஒட்டிச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சந்திரபாபு நாயுடுவின் மீது கல் வீசப்பட்டதை அறிந்த அவரது தொண்டர்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். பின்னர் அவர்களை சந்திரபாபு நாயுடு சமாதானம் செய்தார். இச்சம்பவம் குறித்தும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 ஆகவே ஆந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை வெடிக்கும் ஆபாயம் இருப்பதாக உளவுத்துறை நோட் போட்டிருக்குதாம்.