'கிங்' - 'குஷி' பனையூரில் பவர் பாலிடிக்ஸ் போட்டி! விஜய் வருகைக்கு ஈரோடு போலீஸ் விதித்த 84 நிபந்தனைகள்!
ம.பா.கெஜராஜ்,
தவெக தலைவர் விஜய் 18 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை வாகனத்தில் உரையாற்ற உள்ளார். ஈரோட்டில் நடைபெற உள்ள தவெக பரப்புரை நிகழ்ச்சிக்கு வருகை தரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை, அனுமதி மனுவில் குறிப்பிடப்பட்ட அளவை மீறக் கூடாது என்று காவல்துறை தெளிவான நிபந்தனை விதித்துள்ளது.
விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மூங்கில்பாளையத்தில், தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம் (டிசம்பர் 18) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை வாகனத்தில் உரையாற்ற உள்ளார்.
நிபந்தனைகளில் முக்கியமாக, பரப்புரை வாகனம், விஐபி பெட்டிகள், பெண்கள் பெட்டிகள், பிற பெட்டிகள், உள்நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டும் வரைபடத்தை காவல்துறைக்கு சமர்ப்பிக்க
நிகழ்ச்சி நடைபெறும் போது ஒவ்வொரு பெட்டியிலும் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், அனைத்து பெட்டிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் தவெக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை மனுவில் குறிப்பிடப்பட்ட அளவை மீறக் கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அவசர சூழ்நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தின் இடையே சுலபமாக செல்ல தனி வழித்தடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து, அதன் பதிவை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற முறையில் முன்கூட்டியே கூடுவதை தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள் மற்றும் விளம்பர பதாகைகளில் ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதைத்தவிர, கட்டாயமாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் வருகை தரும் நேரம், புறப்படும் நேரம், அவர் வரும் மற்றும் செல்லும் வழிகள் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும்.
விஜயின் வாகனத்தை தொடர்ந்து வரும் 10 வாகனங்களின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. விஜய் செல்லும் வழியில் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தவெக சார்பில் பேசிய நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கூட்டம் நடைபெறும் இடங்களில் உள்ள பெரிய விளம்பர பதாகைகள் மற்றும் கட்-அவுட்களில் தொண்டர்கள் ஏறி நிற்பதைத் தடுக்க முள் கம்பிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தேவையான அளவில் குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறைகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பனையூர் உள்குத்து
பனையூர் பார்ட்டியில் இப்பவே உள்ளடி அரசியல் உச்சமெடுத்து ஆடுகிறதாம். இதுநாள் வரைக்கும் தன்னைத் தாண்டி யாரையும் தலைவரைப் பார்க்கவிடாமல் 'பக்காவாக'ப் பார்த்துக் கொண்டாராம் கட்சியின் குஷி' மனிதர்.
ஆனால், தலைவரின் நண்பரும் மெத்தப் படித்தவருமான 'கிங்' புள்ளி உள்ளே வந்த பிறகு அந்தக் கட்டுக்கோப்பு கலைந்து போனதாம். எதுவாக இருந்தாலும் 'கிங்' புள்ளி நேரடியாக தலைவரிடமே ஒன் டு ஒன் பேசிவிடுகிறாராம். இதனால் கட்சிக்குள் நடக்கும் பல விஷயங்கள் 'குஷி' மனிதருக்கு லேட்டாகத்தான் தெரியவருகிறதாம்.
தலைவரின் பிறந்த நாளை வட மாவட்டம் ஒன்றில் மன்றத்தினரை வைத்து அமரக்களமாக நடத்தி முடித்தாராம் 'கிங்' புள்ளி. இந்த விஷயம் லேட்டாக தனது காதுக்கு வந்ததும், தன்னைக் கேட்காமல் யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று மன்றத்தினருக்கு அணைபோட்டு வைத்தாராம் 'குஷி' மனிதர்.
இந்த நிலையில், பார்டர் தேசத்தில் அண்மையில் தலைவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தின் போது 'கிங்' புள்ளியின் காரை திடலுக்குள் விட போலீஸார் மறுத்து விட்டார்களாம். உடனே, 'குஷி' மனிதருக்கு போன் அடித்தாராம். அவர் போனை எடுக்கவில்லையாம்.
உடனே, அவருக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு நபருக்கு போன் அடித்தாராம் 'கிங்' புள்ளி. "நீங்கள் போன் அடித்ததை 'குஷி' கவனித்துவிட்டுத்தான் போனை எடுக்காமல் இருக்கிறார்" என்று போட்டுக் கொடுத்துவிட்டாராம் அந்த நபர்.
இதனால், வேறு வழியில்லாமல் பொதுக்கூட்ட திடலுக்குள்ளேயே போக முடியாமல் திரும்பிவிட்ட 'கிங்' புள்ளி, "என்னால் தனக்கு சிக்கல் வருமோ என நினைத்துக்கொண்டு எனக்கு இப்படி எல்லாம் இடைஞ்சல் செய்கிறார்" என்று குஷி' மனிதர் குறித்து தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம்.

admin
