கலையிழக்கப்போகுதா அதிமுக? செங்கோட்டையனும் கோகுல இந்திராவும் போர்க்கொடி! பாஜக தூண்டில் போடுமா?
ம.பா.கெஜராஜ்,
கோவை மாவட்டம், அன்னூரில் நேற்று முன்தினம் நடந்த அவினாசி-அத்திக்கடவு திட்ட குழு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவை முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அதேபோன்று நேற்று சென்னையில் நடந்த விழாவையும் அவர் புறக்கணித்தார்.
இது அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் அதிமுக கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து கோவையில் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிற குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அப்போது விழா மேடை பேனரில் எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. எங்களிடத்தில் கலந்து இருந்தால் நான் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த இந்த தட்டிகளை பார்த்தபோது தான் எனது கவனத்திற்கு வந்தது.
என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்கள் உருவப்படங்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி வழங்கினார்.
இந்த பணிகளை துவங்கியதற்கு அவர்கள் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களது படங்களும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன்.
நான் விழாவை புறக்கணிக்கவில்லை. அங்கு செல்ல வில்லையே தவிர, அத்திக்கடவு -அவினாசி திட்ட கூட்டு குழுவின் கவனத்திற்கு சொல்லி இருக்கிறேன்என்றார்.
இது ஒரு பக்கம் இருக்க, டெல்லியில் ரூ.10 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால் கே.ஏ.செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். அவர் கட்சி தலைமை அலுவலகம் வரவில்லை. தொடர்ந்து 2வது நாளாக அதிமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின்போது திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக தன்னுடைய உறவினரை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார். வேட்பாளர் அறிவிக்கும்போது கூட யார் வேட்பாளர் என்பது செங்கோட்டையனுக்கு தெரியவில்லை. இதனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்.
இதனால் வேட்பாளர் மருத்துவமனை சென்றுதான் ஆசிர்வாதம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக உள்ள பகுதியில் பன்னாரி தொகுதி எம்எல்ஏவை பொறுப்பாளராக போடக் கூடாது என்று செங்கோட்டையன் கூறினார். ஆனால் அவரை பொறுப்பாளராக அறிவித்தார்.
இது போன்ற உரசல்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக அது தெரிய ஆரம்பித்துவிட்டது.
அவரைப்போலவே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் அன்பு, மரியாதை இல்லை. போஸ்டரில் எனது பெயரும் இடம்பெறுவது இல்லை என்று பொங்கியிருக்கிறார்.
இதை பாஜக பக்குவமாக பயன்படுத்த தூண்டில் போடக்கூடும் என்று கூறப்படும் நிலையில், "அட போங்க சார்" அவுங்க ஏற்கனவே வலை பின்னிட்டாங்க என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள்.

admin
