எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனுடன் போனில் சமாதானம் பேசினாரா?

எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனுடன் போனில் சமாதானம் பேசினாரா?

  ம.பா.கெஜராஜ், 

  முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அவரை எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக ஓரங்கட்டத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவரை சமாதானப்படுத்த போன் போட்டதாக தகவகள் வெளியாகியிருக்கின்றன.

  கோவை அடுத்த அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு விவசாயிகள் சார்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

  மேலும் கே.செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

  இதேபோல நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக விழாவிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டார்.

   எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டது தொண்டர்களிடையே குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  அப்படியிருக்க நேற்று மதியம் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசியில் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அடுக்கடுக்கான புகார்களை செங்கோட்டையன் கொட்டி தீர்த்ததாக கூறப்படுகின்றது.

  ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் தனக்கு இருந்த முக்கியத்துவம், மாநில பொறுப்பு ஆகியவை பற்றியும், தற்போது 3 தொகுதிகள் அடங்கிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு செயலாளராக நியமித்திருப்பதையும், தமிழ்மகன் உசேன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பதவி கொடுத்தது பற்றியும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தனக்கான முக்கியத்துவதை குறைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சட்டமன்ற கொறடா பதவி கொடுத்தது பற்றியும் குறிப்பிட்டு எகிறீயிருக்கிறார்.

  மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் முதல்வர் தேர்வின்போது தான் நேர்மையாக செயல்பட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  கட்சியில் மேற்கு மண்டலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களின் ஆதரவு உள்ள நிலையில் தன்னிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் கட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

   அதே போல் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக தனக்கு தகவல் கூட தெரிவிக்காதது, தன்னுடைய மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவிற்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து அவருக்கு கீழே நான் கட்சி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.    

  தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கு பதிலாக கட்சிக்குள் யாரை ஓரங்கட்டலாம் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தால் கட்சி எப்படி வளரும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 தொடர்ந்து கட்சி ரீதியாக தன்னை புறக்கணித்து வருகின்ற நிலையில் எப்படி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும் என்றும் தனது கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.

செங்கோட்டையன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் அளிக்காமல் கடைசி வரை மவுனமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

 இதையடுத்து செங்கோட்டையனை சமாதானப்படுத்துவது குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் செங்கோட்டையன் தரப்புக்கு நம்பிக்கையில்லையாம்.