விரட்டப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.! தொடங்கியது தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்! கடலில் இறங்கி களேபரம்!
க.பாலகுரு,
தேர்தல் என்றாலே, தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் சில இடங்களில் முளைக்கும். அந்த வகையில், தற்போது திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, திமுக வைச் சேர்ந்த சீர்காழி எம்.எல்.ஏ.பன்னீ£ செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல் ஏற்பட்டது.
செல்போன் டவர் அமைப்பதை தடுங்க! இல்லைன்னா ஓட்டு போடமாட்டோம்!
திருவாரூர், தஞ்சை சாலை, குருநகரில் மக்களின் உடல் நலனை பாதித்து, வாழ்வியல் சூழலில் ஆபத்தை ஏற்படுத்தும் உயரழுத்த செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்தும், கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு.
திருவாரூர் குரு நகர் மற்றும் குரு தெட்சிணாமூர்த்தி நகரில் நகரமைப்பு விதிகளுக்கு புறம்பாகவும், மக்களுக்கு இடையூறாகவும் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கனரக வாகனங்களை சாலையில் நிறுத்தி தொழில் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த நகரில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு சீர்குலைத்து குறுக்கு வழியில் கனரக வாகன போக்குவரத்தினை ஏற்படுத்தியுள்ளதை தடுத்து சாலை கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும். நகரில் ஒதுக்குப்புறங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்துவது கஞ்சா புதைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுத்திட வேண்டும்.
திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தினந்தோறும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும்.
நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி குரு நகர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி நகர் குடியிருப்பு மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என அந்த நல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin
