காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜவில் இணைந்தார்! அதிருப்தியே காரணமாம்!
ம.பா.கெஜராஜ்,
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி பாஜகவில் இணையப்போகிறார் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் அதிகார பூர்வமாக பாஜக வில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 முறை போட்டியிட்டு வென்றவர் விஜயதாரணி. அவர் தொகுதிக்குள் மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்கிற நிலையில், சமீப காலமாக அதிருப்தியில் இருந்தாராம். இந்நிலையில் தான் பாஜக தலைமை அவரை தட்டி தூக்கியிருக்கிறது. ம
அதிருப்திக்கான காரணம்!?
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது. அங்கு காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தினாராம்.
ஆனால், காங்கிரஸ் தலைமை எந்த ரியாக்ஷனையும் வெளிக்காட்டவில்லையாம். ஆகவே அவர் பாஜகவில் இணைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்படியென்றால் விஜய் வசந்தை எதிர்த்து விஜயதாரணி தான் அங்கு களம் காணப்போவதாக கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் இந்த கட்சித்தாவல் நடந்துள்ளது.
விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், "விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

admin
