இலங்கை புதிய  அதிபர் ஏகேடி! தமிழகர்கள் நலனில் ஒளிவீசுமா?!

இலங்கை புதிய  அதிபர் ஏகேடி! தமிழகர்கள் நலனில் ஒளிவீசுமா?!

ம.பா.கெஜராஜ்,

 ஏகேடி என அழைக்கப்படும் அநுரா குமார திசாநாயக்க இன்று இலங்கை அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.  அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இலங்கையில் மாற்றம் தேவை என்று கூறி ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தார். 1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.

 அவர் 2019 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 3.16 சதவிகித வாக்குகளை பெற்றார். கடந்த 2022ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்

 இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். 56 வயதாகும் அவர் இலங்கையின் 9-வது அதிபராக இன்று பதவியேற்கிறார்.  

 நடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளராக கருதப்பட்டனர்.

 ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சஜித் பிரேமதாசவுக்கும், அநுராவுக்கும் வாக்குகள் அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. அந்த சூழலில் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அநுர 42 சதவீத வாக்குகளை யும், சஜித் பிரேமதாசா 32 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

 தற்போதைய அதிபர் ரணில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரத்தவறியதால் முதல் சுற்றிலிருந்து அவர் பரிதாபமாக வெளியேற்றப்பட்டார்.

 இந்நிலையில், முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாத காரணத்தால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2 மற்றும் 3-வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையில்  ஏகேடி முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.

  இதனையடுத்து அநுரா குமார திஸநாயக வெளியிட்ட அறிவிப்பில், "நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளம் ஆகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையில் இருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுத தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.ஜாக தமிழர்கள் நலனில் ஒளி வீசும் என்று நம்பப்படுகிறது.