தண்ணீர் திறந்துவிடும் காலிபயல்களை தொரப்பாடி சிறைக்கு அனுப்புவேன்! அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
கு.அசோக்,
தண்ணீர் திறந்துவிடும் காலிபயல்களை தொரப்பாடி சிறைக்கு அனுப்புவேன் என்று அமைச்சர் துரைமுருகன் காட்டமாக சொன்னார். வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தடுப்பணை மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றை பார்வைட்ட போது வேலூர் ஆட்சியர் முன் இவ்வாறு அவர் பேசினார். பொன்னை ஆற்றின் குறுக்கே 12.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தடுப்பணையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் - தடுப்பணைகள் சரியாக கட்டவில்லை என்றால் அதனை செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியது தான் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டேன் - வாலாஜா தடுப்பணை விரைவில் புதுப்பிக்கபடும் என பேட்டியும் அளித்தார்.
வேலூர்மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இந்த தடுப்பணையின் மூலம் குகையநல்லூர் தக்கான்பாளையம், ஸ்ரீபாதநல்லூர், ஏகாம்பரநல்லூர்,மருதம்பாக்கம்,மேல்பாடி.வெப்பாலை,தேம்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 716 ஏக்கர் நிலங்கள் நிலத்தடி நீரும் கிணற்று நீரும் உயரும்மதன் மூலம் 420 விவசாயிகளும் 5 ஆயிரம் பொதுமக்களும் பயனடைவார்கள்.
இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் துணை மேயர் சுனில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இன்று குகையநல்லூரில் மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் சுரக்கவே அணையை திறந்துள்ளோம். மாயனூரில் ஒரு கதவணையை நான் தான் கட்டினேன் அது மிகப்பெரிய தடுப்பணை.
இங்கு வாழையும் கரும்புமாக இருக்கிறது. ஒரு வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கினால் விவசாயம் பயன்படும். குடிநீர் பிரச்சணை தீரும்.
ஆறுகளில் அணையை கட்டும் அமைச்சர் நான் தான். நம்முடைய மாவட்டத்திற்கு அதிகம் தேவைபடுகிறது. நமது மாவட்டத்தில் அதிக தடுப்பணையை கட்ட உத்தரவிட்டேன்.
அரும்பதியில் தடுப்பணை,தண்டலம் கிருஷ்ணாபுரத்தில் தடுப்பணை,குடியாத்தம் பகுதியில் தடுப்பணை,இப்படி வாணியம்பாடி அருகேயும் தடுப்பணை அனைத்தும் நம்முடைய மாவட்டத்தில் கட்டினோம்.
காரணம் விவசாயிகள் பயனடைவார்கள், இதனால் இந்த திட்டங்கள் பயன்படுத்தபடுகிறது இதனை உருவாக்கி கொடுக்கிறோம் இதனை பாதுகாக்க வேண்டியது பொதுமக்கள் தான்.
குடியாத்தத்தில் மோர்தானா அணையை கட்டினோம், இதனால் 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீராக காட்சியளிக்கிறது. லத்தேரி வரையில் அந்த தண்ணீர் வருகிறது இதனால் மக்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது சொன்னார்கள்.
உங்களால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது இதனால் நீங்கள் சொல்பவர்களுக்கு ஓட்டு போடுகிறோம் என்றனர் இவைகள் எல்லாம் ஓட்டுக்காக மட்டுமல்ல மோர்தானா அணை நூறாண்டுகள் நிற்கும். ராஜாதோப்பு அணையும்,ஆண்டியப்பனூர் அணையும் அப்படி தான்.
நான் இன்றைக்கு இருக்கலாம் போய்விடலாம், ஆனால் நான் கட்டிய அணைகள் இருக்கும் வரையில் என் பெயர் இருக்கும். விவசாயிகளுக்கும் நாங்கள் இலவச மின்சாரம் வழங்கினோம், தடுப்பணை 50 ஆண்டுகாலத்திற்கு இருக்கும் 50 ஆண்டுகாலத்திற்கும் தண்ணீர் தேங்கியிருக்கிற பொழுது துரைமுருகன் செய்தார் என சொல்வார்கள்.
ஆனால் இந்த ஊரில் இருக்கும் புன்னியவான்கள் அணையை கட்டி தண்ணீரை தேக்கினோம், ஆனால் சில காலிப்பயல்கள் தண்ணீரை இரவோடு இரவாக திறந்துவிட்டனர்.
15 நாட்களில் உங்களை பிடித்து தொரப்பாடிசிறைக்கு அனுப்புவேன் இது பொது சொத்து உங்க அப்பன் வீட்டுதோ என் அப்பன் வீட்டுதோ அல்ல.
மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட என்றால் ஆளுமை பயம் தண்டனை இருக்க வேண்டும் இல்லையென்றால் இந்த அணையை என்ன செய்வார்கள்.
இதனால் துரைமுருகனுக்கு கெட்ட பெயர் என நினைக்கலாம் அதனை நீ திறக்க முடியாமல் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதிகாரிகள் செய்வார்கள்.
அதே போல் குகையநல்லூரில் இதுவரையில் மொத்தம் 18 கோடி ரூபாய் திட்டங்களை செய்துள்ளோம். வாலாஜா பாலாறு அணைகட்டு 200 ஆண்டுகளாகிறது. பழுதாகி அதனை புணரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்யவுள்ளேன்.
எல்லா தொகுதியையும் என் தொகுதியாக தான் நான் கருதுவேன் அமைச்சர் என்பதால் இதனை கட்டியவர்கள் தாமதமாக கட்டினார்கள் இன்னும் வேக்மாக கட்டியிருக்கலாம் இதனை பலமாக கட்டியிருக்கிறீர்களா அல்லது சரியில்லாமல் கட்டியுள்ளீர்களா என அதிக வெள்ளம் வரும்போது தெரியும்.
சரியில்லாமல் கட்டியிருந்தால் இதனை கட்டியவர்கள் ஜெயிலுக்கு தான் போக வேண்டும். தப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் சிறைக்கு தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் ஒழுங்காக இருக்க வேண்டும் தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி பகுதிகளில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் இரண்டு நாட்களில் ஆய்வு செய்யவுள்ளேன் என பேசினார்.
வாலாஜா பாலார் அணைக்கட்டு
பின்னர் வாலாஜா அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலார் அணைக்கட்டில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமம் அருகே 1858-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலார் அணைக்கட்டு உள்ளது.
ஆனால் அது தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.
இதனை ரூபாய் 200 கோடி 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே தமிழக அரசு நீர்வளத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பாலாறு அணைக்கட்டு பகுதியை தமிழக நீர்வளத்துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் நேரில் சென்று தடுப்பணையை பார்வையிட்டதோடு சேதமடைந்துள்ள பகுதிகளை குறித்து துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசுகையில்
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ள பாலாறு அணைக்கட்டு புதியதாக பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

admin
