பட்டியலின சாதியா என கேட்டு அரிவாள் வெட்டு! 5 பேர் கைது!

பட்டியலின சாதியா என கேட்டு அரிவாள் வெட்டு!  5 பேர் கைது!

ஆர்.பாலஜோதி.

  பட்டியலின சாதியா என கேட்டு 4 பேரை வாளால் வெட்டிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சேர்ந்த பெயின்டர் ராஜூ (32).பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், மார்ச் 3-ம் தேதி பிற்பகல் அங்குள்ள கடைவீதியில் நின்று கொண்டிருந்தார்.

   அங்கு செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜனுக்கும், வே.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

   தொடர்ந்து ராஜூவிடமும் மகேஸ்வரன் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்து மூவரும் தங்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், ஆத்திரத்தில் இருந்த மகேஸ்வரன் அன்று இரவு, தனது நண்பர்கள் 8 பேருடன் 3 இருசக்கர வாகனத்தில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இடைக்காட்டூரில் ராஜூ வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்தார்.

  பின்னர் ராஜூவை வாளால் அந்த கும்பல் வெட்டியது. தடுக்க வந்த ராஜூவின் உறவினர்கள் தினேஷ், ராஜேந்திரன், சுப்பிரமணி ஆகியோரையும் தாக்கியது. பின்னர், செட்டிக்குளம் சென்று, பாண்டியராஜனின் வீட்டையும் அக்கும்பல் அடித்து நொறுக்கியது.

  காயமடைந்த ராஜூ உள்ளிட் 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து மற்றவர்கள் வீடுகளுக்கு திரும்பிய நிலையில், ராஜூ தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

   இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக வி.புதுக்குளத்தைச் சேர்ந்த இருளப்பன் (31), பாலமுருகன் (22), வேல்முருகன் (20), வேம்பத்தூரைச் சேர்ந்த பாரதி (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

   இதுகுறித்து காயமடைந்த ராஜூ ஊடகங்களிடம் தெரிவிக்கையில் நான் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் என்னிடம் சாதியை கேட்டனர். சாதியை கூறியதும், திடீரென என்னை தாக்கினர்.

  பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் எங்களது குடியிருப்புக்குள் புகுந்த 9 பேர் என்னையும், எனது அண்ணன் உள்ளிட்டோரையும் வெட்டி விட்டு தப்பினர்.

    உடனே போலீஸாரை அழைத்தும், அவர்கள் தாமதமாகத்தான் வந்தனர். முறையாக விசாரிக்கவும் இல்லை, மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அழிக்க சொல்லி மிரட்டினர்.

    இருந்தாலும் கூட சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வெளியான பிறகு தான் எங்களை தாக்கிய சிலரை கைது செய்துள்ளனர்' என்றார்.

இது சாதிய பிரச்சனை இல்லை என்று அம்மாவட்ட எஸ்.பி.சிவபிரசாத் விளக்கியிருக்கிறார்.

  பிரச்சனையை திசை திருப்பிவிடாமல் இது பரவாமல் தடுப்பது நலம் என்பது அரசியல் தலைவர்களின் கருத்து.