திமுகவை விட்டு கை நழுவுகிறதா! தமிழக காங்கிரஸில் வெடித்த 13 எம்.எல்.ஏ-க்களின் போர்க்கொடி!
ம.பா.கெஜராஜ்,
ஐதராபாத்தில் தவெக நிர்வாகியுடன் நடந்த ரகசியச் சந்திப்பால் தமிழக காங்கிரஸில் கலகம் வெடித்து, 13 எம்.எல்.ஏ-க்கள் தலைமையை எதிர்த்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் வேகமெடுத்து வரும் நிலையில், கூட்டணி அரசியலில் புதிய அதிர்வை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான விஷ்வரெட்டியை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஐதராபாத்தில் சந்தித்ததாக கூறப்படும் தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் தலைமையில் தவெக தன்னை மாற்று அரசியல் சக்தியாக நிலை நிறுத்த முயற்சி செய்து வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக தவெக முக்கிய நிர்வாகியைச் சந்தித்திருப்பது பல யூகங்களை எழுப்பி உள்ளது.
திமுக கூட்டணியில் தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறையக்கூடும் என்ற அச்சம் காங்கிரஸ் வட்டாரத்தில் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், "பிளான் பி"யாக விஜய்யுடன் இணையும் சாத்தியத்தை ஆராய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.
விஷ்வரெட்டி விஜய்க்கு நெருக்கமானவர் மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா அரசியல் வட்டாரங்களிலும் செல்வாக்கு கொண்டவர் என்பதால், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக கருதுகின்றனர்.
இந்த தகவல் வெளியானதும், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி வெடித்து உள்ளது. சுமார் 13 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து, திமுக கூட்டணியில் தொடர்வதே கட்சிக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பான வழி என வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
"விஜய்யின் கட்சியுடன் கூட்டணி வைப்பது ஆபத்தான அரசியல் முயற்சி" என்பது அவர்களின் நிலைப்பாடாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திமுக கூட்டணியை ஆதரிப்பது, ஸ்டாலின் தலைமையிலான அணியின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. மறுபுறம், காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சியுடன் தொடர்பு கொள்ள விஜய் முயற்சிப்பது, எதிர்கால கூட்டணி அரசியலில் அவர் தீவிரமாகச் செயல்படுகிறாரா? என்று யூகிக்கத்தோன்றுகிறது.
மேலும் ஐதராபாத் சந்திப்பு வெறும் அரசியல் பரிமாற்றமா அல்லது பெரிய கூட்டணிக்கான முன்னோட்டமா என்பது விரைவில் தெரியும்.
ஆனால் 13 எம்.எல்.ஏ-க்களின் எதிர்ப்பு, காங்கிரஸ்-திமுக உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக பார்க்கப்படுகிறது.
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் 36 தொகுதிகளும், 2 ராஜ்ய சபா சீட்டும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், திமுக கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகளை அளிப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுக்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிட்டத்திட்ட முடங்கிப்போனது.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று மதியம் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக எம்.பி. கனிமொழியும் உடனிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக 29 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இரு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
அப்படின்னா முடிவு எட்டப்படவில்லை போலும்.

admin
