சாராய பாக்கெட்டுகளை போல சித்தரித்து அப்பாவிகளை சிக்க வைத்த மர்ம நபர்கள் யார்?

ம.பா.கெஜராஜ்,
ஆந்திராவில் இருந்து சாராயம் கொண்டு வந்ததாக கிடைக்கப்பெற்ற தவறான தகவலின் அடிப்படையில் மினி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலிசார் கைது செய்திருகிறார்கள்.
இதில் சதி இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர மாநில எல்லைப்பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலை கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து சென்று வருகிறது.
இந்த பேருந்து நேற்று காலை வாணியம்பாடியை நெருங்கிய போது டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு யாரோ போன் போட்டு சம்மந்தப்பட்ட மினி பேருந்தில் சாராயம் கொண்டு வரப்படுகிறது என்று தகவல் அளித்திருக்கிறார்கள்.
உடனே போலிசார் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்தில் சாராயம் இல்லை. ஆகவே தகவல் பொய் என்று போலிசார் திரும்பிவிட்டனர்.
வண்டி பேருந்து நிலையத்துக்கு வந்த பின்னர் வண்டியின் ஓட்டுநரும் கன்டக்டரும் உணவருந்த சென்றுவிட்டனர். அதை நோட்டமிட்ட சிலர் பேருந்தில் சாராய பாக்கெட்டுகளை போல சில உறைகளை வைத்துவிட்டு, அவர்களே போலிசாருக்கு மீண்டும் தகவல் அளித்துள்ளார்கள்.
அதன் பின்னர் போலிசார் பேருந்தில் இருந்து சாராய பாக்கெடுகளை போன்ற சில உறைகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அப்போது இது சதிதான் என்று போலிசாருக்கு தெரியவந்திருந்தும் பஸ்நிலையம் அருகில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்யாமல் வழக்கு பதிந்து குற்றம் புரியாதவர்களை சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இது குறித்து விசாரித்த போது, ஏற்கனவே அந்த மினி பேருந்தில் பணியாற்றிய சிலர் பல தவறுகளை செய்ததால் அவர்களை பேருந்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கிவிட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த அத்தரப்பினர் நாங்கள் இல்லாமல் எப்படி வண்டி ஓட்டுகிறாய் பார்க்கலாம் என்று சவால் விட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பேருந்து வாணியம்பாடிக்கு வந்து, நிலையத்தில் நின்ற பின்னர் யாரோ சிலர் சாராய பாக்கெடுகளை போல சில உறைகளை கொண்டு வந்து பேருந்தில் வைத்துவிட்டு தவறான தகவல் அளித்து சிக்க வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
இது குறித்து உண்மை நிலவரம் அறிய வாணியம்பாடி டி.எஸ்.பி.திரு.விஜயகுமார் அவர்களை பல முறை தொடர்பு கொண்டோம். ஏனோ தெரியவில்லை அவர் அழைப்பை ஏற்கவேயில்லை.
குறிப்பு:-மலை கிராமங்களில் இருந்து சாராயம் கடத்தாமல் இருக்க சம்மந்தப்பட்ட ரூட்டில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சுங்க சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதையும் மீறி சாராயம் கொண்டு வருவது என்பது இயலாத செயலாகும் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.