ஒப்பந்ததாரரின் அடாவடியால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு! கம்மென்று இருக்கும் ஆட்சியர்!

கு.அசோக்,
ரத்தினகிரி அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகனங்கள் 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நின்று ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் செயல்பட்டு வரும் சி.எம்.சி. மருத்துவமனை எதிரே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி கட்டும் பணிகள் நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளால் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கின்றன.
அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அனைத்து வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் 24 மணி நேரமும் பரபரப்பாக சாலையில் காணப்படும் வாகனங்கள் அனைத்தும் ஆமை போல் ஊர்ந்து செல்வதால் கனரக வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் சுமார் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நின்று விடுகிறது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே மேம்பால பணிகளை விரைந்து முடித்து வாகனங்கள் கூடிய விரைவில் செல்வதற்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இந்த பணிகளை விரைந்து முடித்திடவும், அதுவரை பக்கவாட்டு சாலையை வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப சீர்படுத்திவைக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்த வேண்டும் அல்லவா?.