கல்குவாரியினரிடம் விலை போன உள்ளூர்வாசிகள்!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் தள்ளுமுள்ளு.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் கருத்துக்கணிப்பு கூட்டத்தில், காவல் துறையினரும் சமூக ஆர்வலர்கள், கிராம மக்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

   விண்ணமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஐந்து கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

   கல்குவாரிகள் அமைந்துள்ள இடத்தில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதாகவும், இதை அமைக்க கூடாது எனவும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கருத்து கேட்பு கூட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

   தமிழ்நாடு முழுவதும் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

   இதில், கல்குவாரி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேசினர். இதனால் சமூக ஆர்வலர்களுக்கும் உள்ளூர் கல்குவாரி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

   தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேச முயன்ற போது, அவரை பேச விடாமல் உள்ளூர் மக்கள் சிலர் வாக்குவாதம் செய்து, காவல் துறையினரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனர்.

மாறி மாறி வாக்குவாதம் நடைபெறுவதால், அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.