தீவிரவாதியை ஆதரித்த பின்னணியாளர் முதல்வரா? யார் இந்த ஆதஷி!
ம.பா.கெஜராஜ்,
டெல்லி அமைச்சரவையில் தற்போது கல்வி மற்றும் பொதுப்பணித் துறை என முக்கியமான இலாகாக்களை தன் கையில் வைத்திருக்கும் ஆதிஷி வசம் முதல்வர் பதவியும் சென்றடைந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஜாமீனில் வெளிவந்தவுடன் அறிவித்தார். அப்போதே அமைச்சர் ஆதிஷி அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது.
அரவிந்த கெஜ்ரிவால் மனைவியின் பெயர் முதல்வர் பதவியை மையப்படுத்தி பேசப்பட்டது. ஆனால், அவரை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முதல்வராகிறார் ஆதிஷி.
இந்நிலையில், அவருக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது.
தீவிரவாதிக்கு ஆதரவு தெரிவித்த ஆதிஷி குடும்பம்.
2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவின் விடுதலைக்கு குரல் கொடுக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரே ஆதிஷியின் தாய் திருப்தா வாகி தான். தந்தை விஜய் சிங் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். அப்சல் குரு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு வழங்கிய கருணை மனுவில் இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் 57, 58 வது நபர்களாக இவர்களின் இருவர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்சல் குருவுக்கு ஆதரவாக ஆதிஷியின் தாய் பேசிய பழைய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி தீவிரவாதிக்கு தொடர்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆதிஷி தலைநகர் டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஏற்கக்கூடியது அல்ல என்று ஆம் ஆத்மியிலிருந்து ஒதுங்கியிருக்கும் ராஜ்ய சபா எம்.பி ஸ்வாதி மாலிவால் விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆதிஷி யார்?
1981-ம் ஆண்டு ஆதிஷி பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள். இவர் 2001-ம் ஆண்டு இளங்கலை வரலாற்றுப் படிப்பை முடித்துள்ளார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு உதவித்தொகை பெற்று முதுகலை வரலாறு படித்துள்ளார்.
அரசியல் பயணம் தொடங்கியது எப்படி? - ஆம் ஆத்மி கட்சியில் 2013-ம் ஆண்டு இணைந்தார். அரசின் ஆலோசகராக இருந்தவர் 2020-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளனர். இதனால், ஆம் ஆத்மியில் தலைமைக்கான வெற்றிடம் இருந்து வந்தது. அவர்கள் கைதான நிலையில்தான் இவருக்கு கேபினட்டில் இடம் வழங்கப்பட்டது. தற்போது கல்வி மற்றும் பொதுப்பணித் துறைகளை என முக்கியமான இலாகாக்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆதிஷி. துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றியபோது பள்ளி வசதிகளை மறுவடிவமைப்பதிலும், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதிலும் பல முயற்சிகளை தொடங்குவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிறையிலிருந்த போது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டவர் ஆதிஷிதான். மேலும் அவர் கட்சியின் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். சௌரப் பரத்வாஜுடன் இணைந்து, மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களுக்குத்த் தலைமை தாங்கினார். தவிர, ஊடகங்களுக்கு நன்கு அறியப்பட்ட நபராக ஆனார். சமீபத்தில் ஹரியானா - டெல்லி தண்ணீர் பிரச்சினையின்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு கவனம் ஈர்த்தார்.
ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவராக வலம் வந்த ஆதிஷிக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சொல்லப்போனால்,அரவிந்த் கெஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது தொடங்கிப் பல பெயர்கள் அடிபட்டன. இந்தநிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் ஆதிஷியின் பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
இதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஆதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்காக டெல்லி முதலமைச்சர் இருக்கை காத்திருக்கிறது.

admin
