எட்டு சவரன் நகையில் முறிந்த பேஸ்புக் கல்யாணம்! பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார்!
தே.சு.ஆறுமுகம்,
வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. எஸ்.பி.என்.மணிவண்ணன், ஏ.டி.எஸ். பிக்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன், கவுதமன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது கணியம்பாடி, வேப்பம் பட்டு கிராமத்தை சேர்ந்த வேண்டா எனபவர் ஒரு புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் எனக்கு 10 ம் வகுப்பு படிக்கும் சூரிய என்ற ஒரு மகனும், 6 ம் வகுப்பு படிக்கும் சக்தி என்ற ஒரு மகளும் உள்ளனர்.எனது கணவர் பாபு வேறொரு பெண்ணுடன் தொடர்பின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்.என் பிள்ளைகளை காப்பாற்ற தனியார் ஷீ கம்பெனியில் வேலை செய்து வந்தேன்.கம்பெனி அவர்கள் சூழ்நிலை காரணமாக மூடிவிட்டனர்.
இதனால் எனது தாயார் தஞ்சம்மாள் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தேன். என் தாய் வேலூர் பூ மார்க்கெட்டில் பூ விற்று என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். இந்நிலையில் எனது தாயார் வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டார். இதனால் பல்வேறு மனக்குழப்பங்களுடன் வாழ்ந்து வந்தேன். இந்த சூழ்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு எனக்கு பேஸ்புக் மூலமாக மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜெயகுமார் மகன் விசாகன் என்பவர் அறிமுகமானார்.இந்த அறிமுகம் காரணமாக என்னிடம் அடிக்கடி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசிவந்தார்.என் குடும்ப சூழ்நிலைகளை கேட்டு எனது விவரங்களை தெரிந்துக் கொண்டார். பின்னர் அவர் நீ கவலைப் பட வேண்டாம், நான் உன் இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுகிறேன். எனக்கு திருமணமாகவில்லை. உங்கள் பிள்ளைகள் தான் என் பிள்ளைகள் நான் ஊர்க்காவல் படையில் வேலை செய்கிறேன்.உனக்கு சம்மதம் இருந்தால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நேரில் வந்து கூறினார்.நான் என் பிள்ளைகள் நலன் கருதி விசாகனிடம் சம்மதம் தெரிவித்தேன். என் பிள்ளைகள் மற்றும் கடவுள் முன்னிலையில் எனக்கு தாலி கயிறு கட்டினார். இதன் அடிப்படையில் 6 ஆண்டுகள் என் பிள்ளைகள் மற்றும் என்னுடன் விசாகன் குடும்பம் நடத்தினார். செங்கல் சூளையில் வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்றினார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மதுரையில் உள்ள தனது வீட்டை கட்ட வேண்டும் என என்னிடம் கூறி மொத்தம் 8 சவரன் நகைகளை கேட்டார். நானும் நம்பிக்கை அடிப்படையில் நகைகளை கொடுத்தேன்.
நகைகளை வாங்கிய பிறகு அவர் சென்று விட்டார். அவர் கடந்த மூன்று மாதங்களாக எனது தொடர்பு துண்டித்து விட்டார். போன் செய்தாலும் போன் எடுப்பதில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் மதுரைக்கு நேரில் சென்று விசாகன் வீட்டில் விசாரித்தேன். அவரது தாயார் எனது மகன் இங்கு இல்லை இனி எனது மகனை தேடி வர வேண்டாம். மேலும் எனது மகனிடம் போனில் பேசினாலும் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் போலீசில் புகார் செய்வேன் என்றும் என் மகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றும் கூறினார்.
நான் எனது மகளின் திருமணத்திற்காக 8 சவரன் நகைகளை சேர்த்து வைத்தேன். எனவே என்னை ஏமாற்றியும், என்னிடம் இருந்த நகைகளை வாங்கிச் சென்ற விசாகன் மற்றும் அவரது தாயார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பேஸ்புக் வாழ்க்கை வீதிக்கு வந்துவிட்டது.

admin
