ஒரு பாலம் கூட கட்டித்தர முடியவில்லையா?
கு.அசோக்,
குடியாத்தம் அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் இறங்கிச் செல்லும் அபாய நிலை - அவசர தேவைக்கு செல்ல முடியாமல் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் பரிதாபம் - பாலம் கட்டித்தர கோரிக்கை.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சித்தாதூர் மற்றும் ஒலக்காசி கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த கிராமத்தின் வழியாக செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் இறங்கி வேப்பூர் கிராம வழியாக குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக மோர்தனா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது குடியாத்தம், அம்மனாங்குப்பம், சித்தத்தூர் வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் தண்ணீர் கலக்கின்றன.
ஆகவே மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் செல்வதற்கு சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒலக்காசி மற்றும் சித்தாத்தூர் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் இறங்கி செல்கின்றனர்
அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பால் வியாபாரிகளும் பால் எடுத்துச் செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேப்பூர் மற்றும் சித்தாத்தூர் இடையான ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர பல்வேறு அதிகாரிகளிடமும் பல்வேறு கட்சி தலைவர்களிடமும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் உடனடியாக வேப்பூரில் இருந்து சித்தாத்தூர் செல்லும் வழியில் இருக்கும் ஆற்றில் குறுக்கே பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

admin
