எப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்? 35 வது தடவை மனு தள்ளுபடி!
Naresh.N.
செந்தில் பாலாஜிக்கு 35வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மே மாதம் ஆறாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பண மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவரும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டாக்டர். ராம் சங்கர், தனது கட்சிக்காரரான, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். மேலும், அமலாக்கதுறை, வேண்டுமென்றே, வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக தனது மனுவை தாக்கல் செய்ய காலதாமதம் செய்துள்ளது,
தனி நபர்களுக்குள் நடந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை, நிறுவனம் தொடர்புடைய மோசடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக, அமலாக்கத்துறை சார்பில், பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக உள்ள செந்தில் பாலாஜி, அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
முன்னதாக, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு கடந்த 25 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 35-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin
