அஞ்சலக காசாளரின் வீட்டின் ரூ.28 லட்சம் கொள்ளை!

கு.அசோக்,
தலைமை அஞ்சலக காசாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 48 சவரன் நகை , ரொக்கம் ரூபாய் 55 ஆயிரம், கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை அரக்கோணம் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அவர் வீட்டை பூட்டிக்கொண்டு சோளிங்கர் கூடலூர் அருகில் உள்ள உறவினரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று அலமாரிகளில் உள்ள துணிகளையும், பொருட்களையும் கீழே தள்ளி நகை, பணத்தை தேடி பார்த்த போது அவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் பூஜை அறைக்குள் சென்றபோது விநாயகர் சிலைக்கு கீழே பீரோ சாவி இருந்துள்ளது. அந்த சாவியை எடுத்து படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை திறந்து பார்த்துள்ளனர்.அதில் ஒரு பீரோவில் லாக்கரில் வைத்திருந்த ஆரம், செயின், நெக்லஸ் என 48 சவரன் நகையும் , ரொக்கம் ரூபாய் 55,000 மற்றும் அரைஞாண் கயிறு, கால் கொலுசு என கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு குமரேசன் தகவல் தெரிவித்தார். ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட பீரோவில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த 9 சவரன் நகைகள் அப்படியே இருந்தது. அந்த நகைகளை வீட்டு உரிமையாளரிடம் இருந்து அரக்கோணம் டவுன் போலீசார் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன நகைகள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.28 லட்சமாகும்.