ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்! ஆட்சியரிடம் நேரில் மனு! நடவடிக்கை உறுதியாம்!

ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்! ஆட்சியரிடம் நேரில் மனு! நடவடிக்கை உறுதியாம்!

ஜி.கே.அசோக்,

30- குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக காலிப்பானைகளுடன் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

   வேலூர்மாவட்டம், குடியாத்தம் மூங்கப்பட்டு பகுதியை சேர்ந்த குலாளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினரை அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காலிப்பானைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

 ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதித்தனர்.  இதில் தியாகராஜன் என்பவரது தலைமையில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

  அதில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாட்டிற்கு பாதை அமைக்க முயல்வதாகவும், இதுகுறித்து புகார் அளித்து வழக்கு தற்போது நடந்து வருகிறது.

 இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர், குலாளர் 30 குடும்பங்களை சேர்ந்த யாருக்கும் எந்த வேலையும் செய்ய கூடாது, பொது பாதையை பயன்படுத்த கூடாது என பல்வேறு வகையில் அச்சுறுத்துகிறார்கள்.

 மேலும், ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். ஆகவே இது குறித்து உரிய விசாரணையை நடத்தி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் முறைக்கு தடை விதிக்குமாறு கோரியுள்ளனர்.

 அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.