தேர்தலுக்கு முன்னரே குஸ்தி! மல்லை சத்யாவுக்கு துரோகி பட்டமா?

 தேர்தலுக்கு முன்னரே குஸ்தி! மல்லை சத்யாவுக்கு துரோகி பட்டமா?

 ம.பா.கெஜராஜ்,

 பாமகவில் அப்பா மகன் பிரச்சனை, அதே மதிமுகவில் மகனால் கட்சி மூத்தவருக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.       

  இந்நிலையில் வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  மல்லை சத்யா தலைமையில் மதிமுகவுக்குள் ளேயே மற்றொரு அணி வளர்ந்து வருவதாகவும், திமுக, தவெக, பாஜக போன்ற மாற்றுக் கட்சியில் இணைவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 இந்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையே பனிப்போர் சமீபத்தில்  முடித்து வைக்கப்பட்டது.

   ஆனாலும் கூட புகைச்சல் இருந்துக் கொண்டே இருந்தது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசினாராம்.

  இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் புகைப்படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது.

   அப்படியிருக்க மல்லை சத்யா குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

  மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவர் தொடர்பு வைத்துள்ளார்.

   என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர் கொடுக்கும் தகவல்களை தான் அவர்கள் பதிவிடுகின்றனர்.

   இதை ஆதாரத்துடன் என்னிடம் நிர்வாகிகள் கூறினர். 7 முறை வெளி நாடுகளுக்கு சென்றபோது கூட அவர் மதிமுக துணை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட வில்லை. என் பெயரையும் எங்கேயும் உச்சரிக்கவில்லை. மதிமுகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். அது நடக்கவில்லை.

   இந்த விவகாரம் மதிமுகவுக்கு பெரிய சோதனையாக வரக்கூடாது என்பதை தெளிவுபடுத்துவதற்காக நிர்வாகக் குழுவில் எடுத்துரைத்தேன். இதற்கு, மேல் மல்லை சத்யா, அவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன்.

  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினாலும், நான் எடுக்கவில்லை. என் உயிரைக் காப்பாற்றிய, கட்சிக்கு விசுவாசமாக இருந்த மல்லை சத்யா, கடந்த 2 ஆண்டுகளாக அப்படியே தலைகீழாக ஏன் மாறினார்? அவர் பட்டியலினத்தவர் என்பதால் ஒதுக்கப்படுவதாகவும் செய்தி பரப்பினார்.

   இந்த விவகாரத்தில் திமுக பின்னணியில் இருப்பதாகக் கூற முடியாது. மதிமுகவின் முத்துரத்தினம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வற்புறுத்தியதன் பேரில் திமுகவில் சேர்க்கப்பட்டார். மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் சொன்னார்.

  மேற்படி வைகோவின் பேட்டியில் சொனதை அறிந்த மல்லை சத்யா தரப்பு, ''குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்றப் பார்க்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார்'' என வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.