நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும்! கருத்துக்கணிப்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் படி, திமுக கூட்டணி 38, அதிமுக கூட்டணி 1 என வெற்றி பெற்றிருந்தன. இந்த சூழலில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி, திமுக 18 முதல் 22 இடங்களை பிடிக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும்.
அதிமுக 5 முதல் 8 இடங்களில் வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி 0 முதல் 1 இடத்தில் வெற்றி பெறும். மற்ற கட்சிகள் 2 முதல் 4 இடங்களில் வெல்லக்கூடும்.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக 32.90 சதவீதமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 14.10 சதவீதமும், அதிமுக 20.20 சதவீதமும், தேசிய ஜனநாயக கூட்டணி 7.10 சதவீதமும், மற்றவர்கள் 25.70 சதவீதமும் பெறக்கூடும்.
இந்த முடிவுகள் திமுகவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த தேர்தலை காட்டிலும் 38 இடங்களை வென்ற திமுக கூட்டணி, இம்முறை அதிகபட்சமாக 22 இடங்கள் வரை தான் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது இரண்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கும் திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளதை இது சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
அதே போல் அதிமுக 8 இடங்கள் வரை வெற்றி பெறும் என்பது அக்கட்சியின் எழுச்சியாக பார்க்கப்படும். ஏனெனில் அதிமுக ஏற்கனவே 1 சீட்டை மட்டும் தான் பிடித்தது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்று விட்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலை தனது புஜங்களை உயர்த்திக் கொள்ளும்.
மேலும் டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 285 முதல் 325 இடங்கள் வரை வெல்லக்கூடும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 111 முதல் 149 இடங்கள் வரை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 275 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என தற்போதைய கருத்துக்கணிப்பு சொல்கிறது.
ஆனால் தேர்தல் வர இன்னும் நாள் இருக்கிறது, அப்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் மனநிலையை பொறுத்து இந்த கணிப்புகள் மாறக்கூடும்.