ரூ.100 கோடி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா வாக்குவாதம்!

ரூ.100 கோடி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா வாக்குவாதம்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து அவரைக் கைது செய்த போலீசார், விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அன்பில் மகேஷ் மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா வாக்குவாதம்!

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சந்திப்பதற்காக வந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கும் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும், உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைச் சந்திக்க அனுமதி கோரி வழக்கறிஞர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் அங்கு கவனத்தை ஈர்த்தது.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.