"தமிழக மக்களின் உரிமை குரல்" சட்டபேரவை பேனரில் விஐய் படம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
அவ்வப்பொழுது புதுச்சேரியில் வைக்கப்படும் அரசியல் பேனர்கள் மக்களை திரும்பி பார்க்க வைக்கும். குறிப்பாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சித்தரித்து வைக்கப்படும் பேனர்கள் சிரிப்புதான் வரும்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு அங்கு வைக்கப்பட்டிருள்ள பேனர் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
விஜய்க்கு இன்று பிறந்த நாள் என்பதால் அதற்காக அவரது ரசிகர்கள் வித்தியாசமான வாழ்த்து பேனரை நிறுவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
புதிய பஸ் நிலையம் அருகே வைத்துள்ள அந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போல் அமைத்துள்ளனர். மைக் போடியம் ஸ்டாண்டில் ச.ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பேனரை உருளையன் பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர். பேனரில் 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்"என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதோடு ரசிகர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர். பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் செய்து அவர்களுக்குள்ளாவே குஷியாகிக் கொண்டிருக்கிறார்கள்.