சப் இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த வாலிபர்கள் கைது!

சப் இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த வாலிபர்கள் கைது!

 கு.அசோக்,

அரக்கோணத்தில் சப் இன்ஸ்பெக்டரை இரும்புராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2  வாலிபர்களை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக நாராயணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவர் தணிகைப் போளூர் ரயில்வே கேட் பகுதியில் பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடுவதற்காக சென்றார்.  அப்போது அங்குள்ள ரயில்வே கேட் வழியாக ரயில் வரும்போது வாலிபர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தனர். அந்த இரு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததால் அவர்களை நிறுத்தி சப்இன்ஸ்பெக்டர் நாராயணசாமி விசாரித்தார்.

   அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்த இரு வாலிபர்கள் ஆபாசமாக பேசி நாராயணசாமியை இரும்புராடால் தாக்கினர். அவரது பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவரது இடது கன்னம், வலது காதில்  சாவியால் குத்தி காயப்படுத்தினர்.

 மேலும் அவரது செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.  இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி புகார் கொடுத்தார்.  அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் வடமாம்பாக்கம் கண்டிகையைச் சேர்ந்த அஸ்வின் (23 ),_ஆகாஷ் (22 ) ஆகியோரை  கைது செய்தனர்.  சப் இன்ஸ்பெக்டரை  இரு வாலிபர்கள் இரும்புராடால் தாக்கிய சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.