உயிரை பணயம் வைத்து ரயில் விபத்தை தடுத்த முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கி முதலமைச்சர் பாராட்டு!
உ.சசிகுமார்,
தங்கள் உயிரை பணயம் வைத்து ரயில் விபத்தை தடுத்த முதியவர்களுக்கு ரூ5 லட்சம் வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமத்தில் 'எஸ்'-வளைவு என்ற பகுதியில், பிப். 25-ம் தேதி நள்ளிரவு கேரளாவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து விழுந்து செங்கோட்டை கொல்லம் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
அப்போது பெரிய சத்தம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வயதான தம்பதிகள் அதிர்ந்தனர். அவர்களது பெயர் சண்முகையா, அவர் மனைவி வடக்குத்தியம்மாள். தம்பதி இருவரும் ரப்பர் பால் வெட்டும் கூலி வேலை செய்துவருகின்றனர். இவர்கள் பயணிகள் ரயில் வரும் நேரம் என்பதால் ஓடிப்போய் டார்ச் லைட் எடுத்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே ரயில் அதே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலை தடுத்து நிறுத்த தம்பதி இருவரும் தண்டவாளத்திலேயே சிறிது தூரம் 'டார்ச்லைட்டை' அடித்துக்கொண்டே ஓடினர். அதனை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார்.
டார்ச் லைட்டுடன் ரயில் எதிரில் ஓடிய முதியவர்களுக்கு மிக நெருக்கமாக ரயில் வந்தபோது, தண்டவாளத்திலிருந்து அவர்கள் அலறல் சத்தத்துடன் பக்கவாட்டில் அவர்கள் இறங்கிவிட்டனர். அப்போது, ரயிலின் எஞ்சினும் முதல் 'கோச்'சும் அவர்களை கடந்த பின்னரே ரயில் நின்றது.
இந்த ரயில் தண்டவாளத்திலிருந்த லாரி மீது மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தைத்தான் சண்முகையாவும் அவர் மனைவி வடக்குத்தியாளும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் பயணிகள் ரயில் பெரிய விபத்திலிருந்து தப்பியது.
இந்நிலையில் சண்முகையா, அவர் மனைவி வடக்குத்தியம்மாளையும் அழைத்து நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராட்டி ரூ. 5 லட்சம் வழங்கினார்.

admin
