வீட்டுவசதி வாரிய நிலத்தில் தலைமைச் செயலகமா? – பட்டினப்பாக்கத்தில் ‘புது ஆட்சி மாளிகைக்கு’ இடம் ரெடி

வீட்டுவசதி வாரிய நிலத்தில் தலைமைச் செயலகமா? – பட்டினப்பாக்கத்தில் ‘புது ஆட்சி மாளிகைக்கு’ இடம் ரெடி

செய்தி:- ம.பா. கெஜராஜ்,
சென்னை:தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை ஒரே வளாகத்தில் அமைக்கும் அரசின் திட்டம் தற்போது இடம் தேர்வு என்ற கட்டத்தை கடந்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் புதிய வளாகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் முக்கிய திருப்பமாக, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு பகுதி சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமானதாக உள்ளது.

புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்துக்காக தங்களுக்குச் சொந்தமான நிலங்களை பயன்படுத்துவதற்கு வீட்டுவசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல ஆண்டுகளாக குடியிருப்புகளுக்கும் பொது பயன்பாட்டுக்கும் அறியப்பட்ட ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி, இனி தமிழகத்தின் அதிகார மையங்களில் ஒன்றாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

முதல்வர் விஜய் ஏற்கெனவே புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது இடம் தொடர்பான பணிகளும் வேகமெடுத்துள்ளன.

புதிய வளாகம் அமைந்தால், தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தமிழகத்தின் நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை செயல்பாடுகள் புதிய இடத்துக்கு நகரும் வாய்ப்பு உருவாகும்.

ஒரு பக்கம் வீட்டுவசதி வாரியத்தின் நிலம்... மறுபக்கம் புதிய தலைமைச் செயலகம்... பட்டினப்பாக்கத்தில் அரசின் ‘புது முகவரி’க்கு அடித்தளம் போடப்பட்டுவிட்டதாகவே இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது.