சுடுகாட்டில் சமைத்து உண்டு பொதுமக்கள் நூதன போராட்டம்! நாட்றம்பள்ளி அருகே கல்குவாரியை மூடக்கோரி!
செய்தி: கு.அசோக்,
நாட்றம்பள்ளி அருகே கல்குவாரியை உடனடியாக மூடக்கோரி, பொதுமக்கள் கைக் குழந்தைகளுடன் சுடுகாட்டின் நடுவில் பந்தல் அமைத்து, உணவு சமைத்து உண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கள்ளியூர் அருகே தென்மலை பகுதியில், கடந்த 2023-ஆம் ஆண்டு தனியார் கல் குவாரி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த குவாரியைச் சுற்றியுள்ள மடபள்ளம், தண்ணிகுண்டுகொல்லி, கல்லூர், சக்கரப்பனூர் ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
குவாரியில் வைக்கப்படும் வெடிகளாலும், கல் அரைக்கும் போது வெளியாகும் தூசித் துகள்களாலும் பொதுமக்கள், விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தொடர் போராட்டங்களின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக குவாரி செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் அந்த கல்குவாரி செயல்பட
செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கல்குவாரி முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு, சுடுகாட்டில் பந்தல் அமைத்து மதிய உணவு சமைத்துச் சாப்பிட்டு கைக் குழந்தைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் வாணியம்பாடி டி.எஸ்.பி. மகாலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், "கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும்; இல்லையெனில் சுடுகாட்டிலேயே இரவு தங்கி போராட்டத்தைத் தொடர்வோம்" என பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

admin
