முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு பெயர் முதல் குற்றவாளி பட்டியலில்
செய்தி:- ம.பா. கெஜராஜ்,
சென்னை:திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடு தொடர்பான விசாரணை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
சுமார் ரூ.1,020 கோடி மதிப்பிலான அரசு டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமலாக்கத்துறை வழங்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 4-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தற்போது வெளியாகியுள்ள வழக்குப் பதிவில் கே.என்.நேருவின் பெயர் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்புடையவர்கள், சில முன்னாள் அரசு அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒப்பந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இடம்பெற்றுள்ளனர்.
டெண்டர் பணிகளுக்காக குறிப்பிட்ட சதவீதத்தில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், டெண்டர் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் தொடர்பான தகவல்கள் சென்றதாகக் கூறப்படும் மின்னணு தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களும் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்தவும், அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை முடிவில் இந்த விவகாரத்தில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளிவரப்போகின்றன என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
