குப்பை மேட்டர்!

குப்பை மேட்டர்!

கு.அசோக்,

 மேல்விஷாரம் நகராட்சி கண்டுகொள்ளாத ஆணையாளர்- மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு!

இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட தெங்கால்-விஷாரம் மேம்பாலம் அருகே பாலாற்றில், துர்நாற்றம் வீசும் குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

   இந்தக் கழிவுகளால் பாலாறு மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதே பாலாற்றில் இருந்து மேல்விஷாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், பொதுமக்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  குறிப்பாக, குடிநீர் உறைகிணறு அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

  எனவே, மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்றும், சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   மேலும், எதிர்காலத்தில் பாலாறு மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.