இடித்து 10 மாதங்களாகியும் துணை சுகாதார நிலையம் கட்டவில்லை! மக்கள் அவதி!

இடித்து 10 மாதங்களாகியும் துணை சுகாதார நிலையம் கட்டவில்லை! மக்கள் அவதி!

கு.அசோக்,

 துணை சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிப்பு. 

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் சேதமடைந்துள்ளதாக கூறி, அந்த கட்டிடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்டது.

   இடிக்கப்பட்ட  துணை சுகாதார நிலையத்தினை மீண்டும் கட்டுவதற்கான எந்த பணிகளும் இதுவரை துவங்கப் படாததால் அவசர கால மருத்துவ தேவைகளுக்கு கூட பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரடிகுப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களும் , குழந்தைகளும் வயதானவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "நாங்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அது சார்ந்த கூலி தொழிலையே பிரதானமாக செய்து வருகிறோம், 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகையில், ஒருநாள் வருமான இழப்பு ஏற்படுகிறது.

  இதனால் மருத்துவ தேவைகளுடன் சேர்ந்து தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மீண்டும் விரைந்து கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.