ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதை தடுக்கும் திமுக பிரதிநிதிகள்! கமிஷன் படுத்தும்பாடு!

கு.அசோக்,
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் தமக்கு டெண்டர் கிடைக்கவில்லையே என்று திமுக பிரதிநிதிகள் தடுப்பதாக கிராம மக்கள் புகார் வாசிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காளாம்பட்டு ஊராட்சியில் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் 40 இலட்சத்தில் டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டர் எடுத்தவர் வேலை செய்ய முற்பட்ட போது ஊராட்சி மன்றத் தலைவர் பானுப்பிரியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் வேறு இடம் பார்க்க வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்த முற்பட்டனர். பிறகு ஊர் பொதுமக்கள் இந்த இடத்தில் தான் மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பானுப்பிரியா, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களை வேனில் அழைத்துக் கொண்டு வந்து எங்கள் தலைவர் தான் வேலை செய்ய வேண்டும் என கூற வைத்தார்.
மேலும் நான் தான் காண்ட்ராக்ட் எடுப்பேன், நான் தான் கட்டுவேன், என்று பி.டி.ஓ. பெருமாள் முன்னிலையில் தெரிவித்தார்.
பி.டி.ஓ. பெருமாள் அவர்களும் அமைதியுடன் சென்றுவிட்டார். பிறகு போலீசார் திங்கட்கிழமையன்று வந்து பணி செய்யுமாறு ஒப்பந்தாரரிடம் அறிவுறுத்தி வேலையை நிறுத்தி விட்டனர். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயா முருகேசனுக்கு டெண்டர் வராததால் மற்றவர்களை தூண்டி விடுகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு கமிஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் எங்களுக்கு மருத்துவமனை விரைந்து கட்ட வேண்டும். சுமார் 15 வருடங்களாக இந்த கட்டிடம் பாழடைந்துள்ளது, புதுப்பிக்க திட்டமிட்ட அரசுக்கு எதிராக செயல்படும் தலைவர் பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.