எம்.எல். ஏ எம்பி எங்கே போனார்கள்! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாணாக்கள்!

 எம்.எல். ஏ எம்பி எங்கே போனார்கள்! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாணாக்கள்!

 ஜி.கே.சேகரன்,

 ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்-  இறந்தவரின் சடலத்தையும் ஆற்றில் நீந்தி எடுத்து சென்ற அவலம்-கவனத்தில் கொள்ளுமா அரசு.

திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிகுப்பம் ஊராட்சி பழைய அத்திகுப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

  இவாகள் தங்களது அன்றாட தேவைகளுக்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் நகருக்கு வருகின்றனர்.

  இதற்காக பொம்மிகுப்பம் அருகில் உள்ள பாம்பாற்று ஓடையின் வழியாக தினமும் சென்று வரவேண்டிய சூழல் உள்ளது.

  மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட இந்த ஆற்று வழியாக தான் சென்று வரவேண்டிய சூழலும் உள்ளது.

  இந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர் பாம்பாற்றின் வழியாக கரை புரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  அப்படியிருக்க அத்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி ராதா வயது 45 என்பவர் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 இவரது சடலத்தை அடக்கம் செய்ய நேற்று அப்பகுதி பொதுமக்கள் ராதாவின் சடலத்தை பாம்பாற்றின் வெள்ளத்தில்  நீந்திப்படி  தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

  இந்த பகுதி பொது  மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இங்கு ஒரு  உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது.

  இதுகுறித்து  அப்பகுதி பொதுமக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக  மாவட்ட ஆட்சியர், சப் கலெக்டர், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரிடம் தொடர்  கோரிக்கை வைத்தும் இதற்காக பல கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இதுவரை அப்பகுதி பொதுமக்களின்  கோரிக்கை கானல் நீராகவே உள்ளது.

  அதேபோல பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் பள்ளி முடித்து வீட்டுக்கு திரும்பும் போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையை கடக்க பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளார்கள்.

  தங்கள் உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி கரையை கடந்தனர்.  அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் அவல நிலை தொடர்கதையாகி வருவது வேதனையாக உள்ளது.

  அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.