பறக்கும்படைக்கு டிமிக்கி கொடுத்த கட்சிக்காரர்கள்! பணத்தை வீசிவிட்டு எஸ்கேப்!

பறக்கும்படைக்கு டிமிக்கி கொடுத்த கட்சிக்காரர்கள்! பணத்தை வீசிவிட்டு எஸ்கேப்!

  கு.அசோக்,

 வாணியம்பாடி அருகே இருவேறு இடங்களில்  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன்  பணத்தை வீசிவிட்டு தப்பி ஓட்டம். பணத்தை மீட்ட பறக்கும் படை அதிகாரிகள்  வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதிகளில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தபோது அப்பகுதிகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் பணம் மற்றும் வாக்காளர் பட்டியல்களை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து தூக்கிவீசப்பட்ட 2 லட்சத்தி 38 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 இதனை தொடர்ந்து அப்பணத்தை வாணியம்பாடி சார் நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

ஆனால் தப்பியோடியவர்கள், அவர்களை அனுப்பியவர்களிடம் மூன்றரை லட்சத்தை பறிகொடுத்ததாக சொன்னார்களாம்.

அதேபோல் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு கந்தனேரி கூட்ரோட்டில் பறக்கும் படையின் சி1 பிரிவினர் சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் எண்ணிக்கை கொண்ட அரசியல் கட்சி கொடியை கைப்பற்றினர்.