பாமகவில் ராமதாஸ் - அன்புமணி லடாய்! நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்டு வெளியேறலாம்!
ம.பா.கெஜராஜ்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அகட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.
இளைஞர் அணி தலைவராக இருந்த ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். அதற்கு காரணம் அன்புமணி தான் என்று கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து அந்த பதவி காலியாக இருந்து வந்த நிலையில் முகுந்தன் பரசுராமனை அந்த பதவியில் நியமித்தார் டாக்டர் ராமதாஸ். இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டதும் இதற்கு கட்சியின் மாநில தலைவரான அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நான்கு மாதங்களுக்கு முன் கட்சியில் சேர்ந்தவருக்கு இந்த பதவியா என்று அன்புமணி கொதித்தார். மைக்கை வீசி கோபத்தை வெளிக்காட்டினார்.
இதனால் கோபமடைந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கட்சியை உருவாக்கியது தான்தான் என்றும் தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று கூறினார். தனது கருத்தை கேட்க முடியாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்றும் அதிரடி காட்டினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அன்புமணி ராமதாஸ் சென்னை உள்ள பனையூரில் தனியாக கட்சி அலுவலகம் திறந்து இருப்பதாகவும் அங்கு வந்து தொண்டர்கள் தன்னை சந்திக்கலாம் என்றும் கூறி ஒரு தொடர்பு எண்ணையும் வெளியிட்டார்.
பாமகவுக்குள் ஏற்கனவே சில சலசலப்புகள் இருந்து வந்த சூழலில், தற்போது முகுந்தன் பரசுராமன் என்பவரால் விவகாரம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
இத்தனைக்கும் முகுந்தன் பரசுராமன் பாமக நிறுவனர் ராமதாஸின் மகளான ஸ்ரீகாந்தியின் மகன் ஆவார். முகுந்தன் பரசுராமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். .