தமிழக நகை வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கர்நாடக போலீசார்! வியாபாரிகள் ஆத்திரம்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பூகடை பஜார் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகர காவல் நிலையத்தை வணிகர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோரை சாந்தாபுரா போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 13 தங்க செயின்களை வாணியம்பாடியில் உள்ள சாந்தி ஜுவல் பேலஸ் மற்றும் ஷர்மிளா நகை கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கர்நாடகா போலீஸார் வாணியம்பாடியில் உள்ள ஷர்மிளா நகைக்கடை உரிமையாளர் பாபு என்பவரை கைது செய்து விசாரணைக்காக சாந்தாபுராகாவல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து நகை கடை உரிமையாளரை கைது செய்ததாக வாணியம்பாடியில் உள்ள வணிகர் சங்கத்தினர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நகர காவல் நிலையத்தை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நகர காவல் நிலையத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடகா போலீசாரிடம் பேசி நகைக்கடை உரிமையாளர் பாபு திருட்டு நகைகளை கொள்முதல் செய்யவில்லை என்றால் நிச்சயம் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 5 மணி நேரம் நகர காவல் நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த பகுதி நகைகடைகளுக்கு கர்நாடக போலீசாரால் அவ்வப்பொழுது இது போன்ற பிரச்சனை ஏற்படுவதும். பின்னர் அவர்கள் வியாபாரிகளிடம் மிரட்டி பணம் வாங்கி கொண்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதற்கு உள்ளூர் போலீசார்தான் முக்கிய காரணம்.
ஏனென்றால் வெளிமாநில போலீசார் சம்மந்தப்பட்ட தமிழக போலீஸ் நிலைய எல்லைக்குள் விசாரணைக்காக வரும் பொழுது தகவல் தெரிவித்துவிட்டு வரவேண்டும். அப்படி எந்த நடைமுறையையும் கர்நாடக போலீசார் பின்பற்றுவதில்லை. இருந்த போதும் இது குறித்து தமிழக போலீசார் அண்டை மாநில போலீசாரிடம் கேட்டுக் கொள்வதில்லை.
அதே தமிழக போலீசார் கர்நாடகாவுக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் நுழையவே முடியாது.