திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளி! திமிரியில் மறியல்!

  திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளி! திமிரியில் மறியல்!

கு.அசோக்

 திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கடும் அமளியில் ஈடுபட்டனர்.

 அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து டெண்டர் விடப்பட்ட தகவல் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காததால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என துணைத்தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 329 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

 இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு திமுகவை சேர்ந்த லட்சுமி தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைத்தலைவர் கலாவதி,  நகர்மன்ற குழு தலைவர் துரை சீனிவாசன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அதே நேரம் டெண்டர் குறித்த விவரம் எந்த கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை.  உள்ளாட்சி பிரதிநிதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

  எனவே இந்த தீர்மானத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கடும் கூச்சலில் குழப்பத்தில் ஈடுபட்டனர்.  அதன் பின்னர் மன்ற கூட்டத்திலிருந்து நகராட்சி தலைவர் லட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் எழுந்து நகராட்சி தலைவர் அறைக்கு சென்றனர்.  அங்கு அனைவரும் ஆவேசமாக கூச்சலிட்டனர். இருப்பினும் தீர்மானம் பாஸ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

   திமிரி மறியல்,

  திமிரி பேருந்து நிலையத்தை  மேம்படுத்த கோரி மக்கள் சாலைமறியல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 இராணிப்பேட்டைமாவட்டம்,திமிரியில் பேருந்து நிலையமானது செயல்பட்டு வருகிறது. ஆனால் போதிய் வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது.

  திமிரி பேருந்து நிலையத்தை மேம்படுத்த கோரி மக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று பொதுமக்கள் பேருந்து நிலையத்தினை மேம்படுத்த கோரி திமிரி ஆரணி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த திமிரி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.