முதல்வர் ரேஸில் உள்ள சித்தராமையா - டிகே.சிவக்குமார்! பலமும் பலவீனமும்!!

முதல்வர் ரேஸில் உள்ள சித்தராமையா - டிகே.சிவக்குமார்! பலமும் பலவீனமும்!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்.

 முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை பார்ப்போம். குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், 'அஹிந்தா' (தலித், ஓ.பி.சி., சிறுபான்மையினர்) தலைவராக பார்க்கப்படுகிறார்.

  மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அவருக்கு கர்நாடகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயர் எடுத்துள்ள அவர் மீது எந்த விதமான ஊழல் வழக்குகளோ அல்லது சொத்து குவிப்பு வழக்குகளோ கிடையாது.

   அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் அதே அளவுக்கு அனுபவம் உள்ளது. நகைச்சுவை, கேலி, கிண்டல் கலந்த சித்தராமையாவின் பேச்சு மக்களை சுண்டி இழுப்பதாக உள்ளது. சாதி, மதம், கட்சி ஆகியவற்றை தாண்டி பொதுக்கூட்டங்களில் அவரது பேச்சை கேட்பதற்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கம்.

 மாற்று கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பது உண்டு. ஆனால் சித்தராமையா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவ்வளவாக தீவிரமாக செயல்பட கூடியவர் இல்லை.

 சித்தராமையா ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அனுபவம் கொண்டவர். பா.ஜ.க, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்டவர். அதே நேரத்தில் அவரது பலவீனம் என்னவெனில், நல்லாட்சி வழங்கினாலும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறியது, காங்கிரசில் இன்னும் சில தலைவர்கள், சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்று சொல்வது, அவருக்கு தற்போது 75 வயது ஆவது போன்றவை அவருக்கு பலவீனமாக உள்ளது.

  மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், 1985-ம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

   மாணவர் காங்கிரசில் நிர்வாகியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

    கட்சியை வலுப்படுத்துவதிலும், வியூகம் வகுப்பதிலும் சிறந்து விளங்கும் அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மெல்ல உருவாகி வருகிறார். தென் கர்நாடகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வட கர்நாடகத்தில் அவ்வளவாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

   காங்கிரசின் "டிரபல் சூட்டர்" என்று சொல்லப்படும் டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் கூறும் பணிகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடிப்பவர். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது குதிரை பேரத்திற்கு பயந்து அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்தபோதும், அது முடியாமல் போனது.

   அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பலரது மந்திரிசபையில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றியுள்ளார். கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட டி.கே.சிவக்குமாருக்கு மாநிலம் முழுவதும் சம அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் அவர் பிற சமூகங்களுக்கான தலைவராக மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

  டி.கே.சிவக்குமார், கட்சிக்கு விசுவாசமிக்கவர், சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக பழகக்கூடியவர், ஒக்கலிகர் சமூகம் அவரை ஆதரிப்பது, வயது போன்ற விஷயங்கள் பலமாக அமைந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பதால் அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும்.

  இதற்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களாக இருந்து முதலமைச்சர் பதவியை அடைந்தவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது. ஆனால் சித்தராமையாவின் அனுபவம், மக்கள் செல்வாக்கு, அவருக்கு இருக்கும் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, வழக்குகள் போன்றவை டி.கே.சிவக்குமாருக்கு தடையாக உள்ளன.

   அவரது பலவீனம் என்று சொன்னால், டெல்லியில் சிறையில் இருந்தது, பிற சமூகங்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இல்லாதது போன்றவை ஆகும்.

   மேலும் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா போல் அந்த வழக்குகளில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

    இவை டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது.

   ஆக விரைந்து முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை அக்கட்சி தலைமை உணர்ந்திருக்கும் என்பதில் அய்யம் வேண்டாம்.