சூளை தொழிலாளிக்கு 2 கோடியே 76 லட்சம் ரூபாய் வரி! பேர்னாம்பட்டு ஆசாமிகள் மீது நடவடிக்கை எப்போதோ?!
கு.அசோக்,
ஆம்பூர் அருகே செங்கல் சூளை தொழிலாளிக்கு 2 கோடியே 76 லட்சம் ரூபாய் வரி கட்டுமாறு ஜி.எஸ்.டி நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் விவசாயமும் செங்கல் சூளையில் கூலி தொழிலும் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சென்னை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், ராஜ்குமார் பெயரில் சென்னை பல்லாவரத்தில் தொழிற்சாலை ஒன்றை கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அபராதத்துடன் சேர்த்து ரூ.2 கோடியே 76 லட்சம் வரி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கடுத்து அவரது வீட்டிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், உடனடியாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
ஆனால் காவல்துறையினர், "இது ரூ.5 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள வழக்கு, எனவே இதை மாவட்ட காவல்துறை அலுவலகம் அல்லது சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் மட்டுமே புகார் செய்ய முடியும் என்று கூறி திருப்பி அனுப்பி கடமையாற்றியிருக்கிறார்கள்.

இதையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாகிய ராஜ்குமார், நான் தொழிற்சாலை நடத்தவே இல்லை, என்னுடைய ஆவணங்களை யாரோ மோசடியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கவலை தெரிவித்து வருகிறார்.
ஆம்பூர் பகுதியில் பல கூலி தொழிலாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி முகவரியில் தொழிற்சாலைகள் பதிவு செய்து மோசடி நடைபெற்று வருவதாகவும், இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தனி குழுவை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு:- இதற்கான மூலக்காரணிகளான சிலர் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட்டு நகரிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் உள்ளனர், அவர்கள் மீது பல இடங்களில் புகார் தெரிவித்தும் கூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கம்மென்று இருப்பதைப் பார்த்தால் வேறு மாதிரி நினைக்கத் தோன்றுகின்றது.

admin
