கனமழை சேதத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்! முன் கூட்டியே நிவாரண நிதியளித்த பிரதமர்!

கனமழை சேதத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்! முன் கூட்டியே நிவாரண நிதியளித்த பிரதமர்!

ம.பா.கெஜராஜ்,

 மழை வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். அவர் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாதிப்புகள், நிவாரணம் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு பேரிடர் நிவாரண நிதியை பிரதமர் முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

  கடந்த நான்கு நாடகளுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீட்பு, நிவாரணம், சீரமைப்புக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்றும், மத்திய குழுவினரை விரைவில் அனுப்பி பார்வையிட்டு, நிதியை விரைவாக வழங்குமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

  அதே போல், மழை பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்திலும் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று முன்தினம் பேசி, விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்.

 அப்படியிருக்க, புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை டெல்லியில் இருந்துவிமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் மத்திய தகவல் ஒலிபரப்பு துறைஇணை அமைச்சர் எல்.முருகன்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயலர் கமல் கிஷோர் ஆகியோரும்  வந்திருந்தனர்.

   புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சென்று ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் வெள்ள சேதம், பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டரில் இருந்தபடியே விளக்கினர்.

  பின்னர் தலைமைச் செயலகம் வந்த ராஜ்நாத் சிங்கை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள்தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

  மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த3, 4-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம்109.41 செ.மீ. மழை பெய்தது, சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்திருப்பது,தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, இதன் காரணமாக, பலலட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

  அதற்காக மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண பணி குறித்தும் விளக்கப்பட்டது.

வெள்ள சேதங்களை சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தெரிவித்து, இடைக்கால நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றுமுதல்வர் கேட்டுக் கொண்டார். கோரிக்கை மனுவையும் ராஜ்நாத் சிங்கிடம் அளித்தார். பின்னர் அவர் பிற்பகல் டெல்லி திரும்பினார்.

 இந்நிலையில், பேரிடர் நிதி ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, டிசம்பரில் 2 தவணையாக மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய  அரசு வழங்குகிறது. இதன்படி, கடந்த ஜூலையில் முதல்கட்ட பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.450 கோடி, ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடி வழங்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் இம்மாத இறுதியில் 2-ம் கட்ட பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தமிழகம், ஆந்திராவுக்கு இந்த நிதியை முன்கூட்டியே வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அதில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரா  ஆகிய 2 மாநிலங்களிலும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, 2-ம் கட்ட மாநில பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.450 கோடி, ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியை முன்கூட்டியே வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'எக்ஸ்' வலைதள பதிவில் நேற்று தெரிவித்துள்ளார்.