என்.டி.ஏ கூட்டணியில் உள்ள 10 கட்சியில் ஒன்று அதிமுக! செங்கோட்டையன் கிண்டல்!   

என்.டி.ஏ கூட்டணியில் உள்ள 10 கட்சியில் ஒன்று அதிமுக! செங்கோட்டையன் கிண்டல்!   

ஜி.சாந்தகுமார்,

 அதிமுக என்பது என்.டி.ஏ கூட்டணியில் உள்ள 10 கட்சியில் ஒன்று என தவெக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கோபி அருகே நம்பியூர் கோசனம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற செங்கோட்டையன் அளித்த பேட்டி: 2026ல் தவெக தலைவர் விஜய்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்து வாக்களிக்க இருக்கிறார்கள்.

     தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு முதலமைச்சராக இருந்தவர் அங்கு செல்லவில்லை. எங்களை பற்றி அவர்கள் பேசுவது தேவையில்லை. எங்களை பொறுத்தவரை திமுக தான் எதிரி.

   அதிமுக என்பது என்.டி.ஏ கூட்டணியில் உள்ள 10 கட்சியில் ஒன்று. அதிமுக என்பது கட்சியே இல்லை. கூட்டணி தொடர்பாக நல்லதே நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.

   இன்னும் போக போக தான் கூட்டணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பது தெரியும். குறுகிய காலத்தில் அங்கு கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் இங்கு வருவார்கள்.

  அதிமுக ஆட்சியில் தானே நீங்கள் அமைச்சராக இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, ''அமைச்சராக இருந்தது என்பது வேறு. நான் சொல்வது வேறு. அன்றைய நிலையில் நான் முதலமைச்சர் அல்ல எதை வேண்டுமானாலும் செய்வதற்கு. அதிகாரத்தை காட்டுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

   அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இருக்கின்ற போது கல்வித்துறையில் பெரிய புரட்சியை உருவாக்கினேன். அடுத்த துறைக்கு நான் செல்ல முடியாது. ஒரு துறை என்றால் அந்த துறைக்கு மட்டும்தான் அதிகாரத்தை செலுத்த முடியும். மற்ற துறைக்கு அதிகாரத்தை செலுத்த இயலாது. இந்த கேள்வி கேட்க கூடாத கேள்வி'' என்று சொன்னார்.